ஈரோடு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு! 

5th Jul 2022 11:21 AM

ADVERTISEMENT

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 5914 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 83 அடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

அதன்படி கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி  மலைப்பகுதி மற்றும் வடகேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, அப்பர் பவானி, கூடலூரில் அதிக பட்ச மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் 
மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

இதையும் படிக்க: காரைக்காலில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் ரங்கசாமி

நேற்று காலை பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து 1006 கன அடியாக இருந்த நிலையில் மழையின் காரணமாக இன்று காலை நீர்வரத்து 5914 கனஅடியாக அதிகரித்துள்ளது. செவ்வாய் கிழமை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.98 அடியாகவும், நீர் இருப்பு 17.31 டிஎம்சி ஆகவும் உள்ளது. 

அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT