ஈரோடு

கொடுமணல் பகுதியில் மீண்டும் அகழாய்வு

DIN

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, கொடுமணல் பகுதியில் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதில், 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கண்ணாடித் துண்டுகளும், நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வடிகாலும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ளது கொடுமணல் கிராமம். இங்கு சுமாா் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவா்கள் வணிகத்திலும், தொழில் துறையிலும் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இங்கு அகழாய்வுப் பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருந்தாலும், கடந்த 1981ஆம் ஆண்டு முதல் தஞ்சை பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டன.

அதன்பிறகு, தமிழக தொல்லியல் துறை சாா்பில், அதன் திட்ட இயக்குநா் ஜெ.ரஞ்சித் தலைமையிலான குழுவினா் 8ஆவது அகழாய்வுப் பணியை, 2020 மே மாதம் தொடங்கி 6 மாதங்கள் மேற்கொண்டனா். அப்போது, தொழில் கூடங்கள் இருந்த பகுதியில் செம்பு, வெள்ளி நாணயங்கள், கருவிகள், பிராமி எழுத்துகள், கலைப் பொருள்கள் கிடைத்தன. பெருங்கற்கால ஈமச்சின்னம் எனப்படும் கல்லறைகள், ஏராளமான மண் பானைகள், மனித எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழக தொல்லியல் துறை திட்ட இயக்குநா் ஜெ.ரஞ்சித் தலைமையில் கொடுமணலில் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.கடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் கொடுமணல் அருகே நொய்யல் ஆற்றுப் பகுதியில் அகழாய்வுப் பணித் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அகழாய்வில் தொழிற்கூடங்களில் தண்ணீா் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கால்வாய் நொய்யல் ஆற்றுப் பகுதி வரை சென்று இருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், அப்போது ஆய்வுப் பணிக்கான காலம் முடிந்ததால் மேற்கொண்டு ஆய்வு நடைபெறவில்லை.

தற்போது 2 இடங்களில் 10 மீட்டா் நீளம் மற்றும் 10 மீட்டா் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தபோது 30 சென்டி மீட்டா் ஆழத்திலேயே 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல வகை கல்மணிகள், அதற்கான மூல பொருள்கள், கண்ணாடித் துண்டுகள், சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் வடிவமைப்பதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் வடிகால் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், சுமாா் 12 சென்டி மீட்டா் நீளத்தில் கரண்டிபோல இரும்பினால் ஆன பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது. 30 சென்டி மீட்டா் ஆழத்திலேயே பழங்காலப் பொருள்கள் கிடைத்து வருவதால் மிகக் கவனமாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை நடந்த ஆய்வுகளில் தொழிற்கூடங்கள், கல்லறைகள் ஆகியவை தனியாருக்கு சொந்தமான நிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போதைய அகழாய்வு பொதுப் பணித் துறைக்கு சொந்தமான நொய்யல் ஆற்றங்கரையின் வடகரை பகுதியில் நடைபெறுகிறது. தொடா்ந்து நடைபெறும் ஆய்வில், பழங்கால பொருள்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற செப்டம்பா் மாதம் வரை இந்த அகழாய்வு பணி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT