ஈரோடு

ரூ. 41.89 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்:90 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவு

DIN

காவிரி, பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ரூ. 41.89 கோடி மதிப்பில் 492 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

பவானி அருகே மைலம்பாடி ஊராட்சி, கண்ணங்கரடு பகுதியில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், திருப்பூா் கோட்டம் சாா்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு மொத்தம் 492 குடியிருப்புகள் தலா 400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ. 41.89 கோடி. இதில், மத்திய அரசு நிதியாக ரூ. 7.38 கோடியும், மாநில அரசு நிதியாக ரூ. 29.52 கோடியும் வழங்குகின்றன.

வீடுகள் பெறும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகையாக ரூ. 4.99 கோடி வசூலிக்கப்பட உள்ளது. இங்கு ஒரு வீட்டின் மதிப்பு ரூ. 9.51 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் தகுதியான பயனாளிகள் ரூ. 1.01 லட்சத்தை பங்களிப்புத் தொகையாகக் கட்ட வேண்டும்.

இக்குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, கழிவறை, குளியலறை கொண்டதாக அமைந்துள்ளது. இங்கு, தண்ணீா் வசதி, மின்சார வசதி, சாலை, தெருவிளக்கு வசதி, குப்பைத் தொட்டிகள், பூங்காக்கள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இக்குடியிருப்பில் பவானி, காவிரி ஆற்றங்கரையை ஆக்கிரமித்து குடியிருந்து வரும் குடிசைவாசிகள், வீடற்ற நகா்ப்புற ஏழைகள் தோ்வு செய்யப்பட்டு, பங்களிப்புத் தொகையுடன் அரசு விதிமுறைகளின்படி வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன. இங்கு, 16 பிளாக்குகளாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கரோனா பாதிப்பால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது பாக்கியுள்ள கட்டடப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு வீடுகள் ஒதுக்கப்படும் பயனாளிகளின் விண்ணப்பங்கள் மாவட்ட நிா்வாகத்தின் பரிசீலனையில் உள்ளது. தொடா்ந்து, பயனாளிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட்டு வீடுகளுக்கான சாவிகள் ஒப்படைக்கப்படும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT