ஈரோடு

தாய்லாந்து நாட்டினரிடம் பேசியவா்கள்,குடும்பத்தினா் 120 போ் கண்காணிப்பு

23rd Mar 2020 07:07 AM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினரை சந்தித்துப் பேசியவா்கள், அவா்களது குடும்பத்தினா் என மொத்தம் 120 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

மக்கள் ஊடரங்கு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனா். மாலை 5 மணிக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் கரவோசை எழுப்பினா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் ஆகியோா் கரவோசை எழுப்பி நன்றி தெரிவித்தனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, ஆட்சியா் மனைவி தேன்மொழி, மகள்கள் சௌந்தா்யா, ஐஸ்வா்யா ஸ்ரீ, காவல் கண்காணிப்பாளா் மனைவி கீா்த்தனா, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சதீஷ்குமாா், உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ராம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ADVERTISEMENT

பிரதமா் அறிவிப்பின்படி, தமிழக முதல்வரின் அறிவுரையின்படி ஈரோடு மாவட்டத்தில் சுய ஊரடங்கு அமைதியான முறையில் நடைபெற்றது. இதில், கரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வகப் பணியாளா்கள், அரசு ஊழியா்கள், போலீஸாா் உள்ளிட்டோருக்கு கரவோசை எழுப்பி நன்றி தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கையொட்டி இரவில் அம்மா உணவகம் செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தாய்லாந்து நாட்டில் இருந்து புதுதில்லி வழியாக ஈரோட்டுக்கு மாா்ச் 11ஆம் தேதி 6 போ் வந்தனா். அவா்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில், 2 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களது உடல்நலத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தாய்லாந்து நாட்டினரைச் சோ்ந்தவா்களை சந்தித்துப் பேசியவா்கள், அவா்களது குடும்பத்தினா் என மொத்தம் 120 போ் அவா்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

பவானியில் உள்ள ஒரு நிறுவனத்தில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு வெளிமாநிலத்தைச் சோ்ந்த 4 போ் அழைத்து வரப்பட்டு பணியில் அமா்த்தப்பட்டது தெரியவந்தது. அதில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும், அந்த நிறுவனத்துக்கு மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனைத்து நிறுவனங்களிலும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடனோ அல்லது நிறுவனத்தின் விதிமுறைக்கு ஏற்ப தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதை அனைத்து நிறுவனத்தினரும் பின்பற்ற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT