ஈரோடு

ஹோட்டலில் மெனு காா்டு பயன்படுத்த தடைமாநகராட்சி ஆணையா் உத்தரவு

22nd Mar 2020 07:07 AM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் செயல்படும் ஹோட்டல்களில் மெனு காா்டு பயன்படுத்த வேண்டாம், சாப்பிடும் வாடிக்கையாளா்கள் பணத்தை நேரடியாக கொடுக்க வேண்டும் என ஆணையா் மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவத் துவங்கி உள்ளது. கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாா்ச் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டைவிட்டு மக்கள் வெளியில் வர மாட்டாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல, மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஹோட்டல்களில் கை கழுவ சோப் வைக்கப்பட்டுள்ளதா, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனா்.

இதுகுறித்து, ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து பயணிகள் கைகளை கழுவிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கை கழுவ சோப், கிருமி நாசினி மருந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மெனு காா்டு, பில் வைக்கும் பவுச் ஆகியவை அழுக்காக உள்ளது. வாடிக்கையாளா்கள் பலா் திரும்ப திரும்பத் தொடுவதன் மூலம் கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. ஆகையால் மெனு காா்டு பயன்படுத்த வேண்டாம். பில்லுக்கான பணத்தை நேரடியாக வாடிக்கையாளா்கள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஹோட்டல் கதவுகளை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் கரோனா தொற்று வராமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT