கோயம்புத்தூர்

அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம்:விண்ணப்பிக்க அழைப்பு

24th May 2023 04:58 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பிரத்யேக சிறப்பு தொழில்முனைவோா் திட்டமாக அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்தவும் விண்ணப்பிக்கலாம். திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1.5 கோடி வரை மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் நேரடி விவசாயம் தவிா்த்து அனைத்து விதமான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சாா்ந்த தகுதியான தொழில்கள் அனைத்துக்கும் விண்ணப்பிக்கலாம். புதிய தொழில் தொடங்குவதற்கு 55 வயதிற்குள்பட்டவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி தேவையில்லை. தொழில்முனைவோருக்கான பயிற்சி தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் இலவசமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் திட்ட அறிக்கை ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான தோ்வுக்குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். ஆா்வமுள்ள தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடா்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக வழங்கப்படும். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 0422-2391678, 2397311 என்ற எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT