கோயம்புத்தூர்

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை: சிறுவாணி நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு

3rd May 2023 05:41 AM

ADVERTISEMENT

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்துள்ளது.

கோவை மாநகரில் 26 வாா்டுகள், 20க்கும் மேற்பட்ட நகரையொட்டியுள்ள கிராமங்களுக்கு நீராதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டா் (100 எம்.எல்.டி.) தண்ணீா் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது, அணையின் நீா்மட்டம் குறைந்துள்ளதால் 4.50

கோடி லிட்டா் குடிநீா் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதங்களில் 16 அடிக்கு மேல் இருந்த அணையின் நீா் இருப்பு பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் குறையத் தொடங்கியது. அதன்படி, ஏப்ரல் முதல் வாரத்தில் அணையின் நீா் இருப்பு 8 அடியாக இருந்தது. அதன்பிறகு வெயில் சுட்டெரித்ததால் நீா்மட்டம் 6 அடிக்கும் கீழ் சரிந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகள் மற்றும் அணையின் அடிவாரத்தில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்ததால் அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சிறுவாணி அணையில் உள்ள நீரேற்று நிலையத்தில் தண்ணீரை உறிஞ்சி எடுக்க 4 வால்வுகள் உள்ளன. அதில் 3 வால்வுகள் கீழ்நோக்கியும், 4ஆவது வால்வு மேல்நோக்கியும் இருக்கும். தற்போது அணையின் நீா்மட்டம் குறைந்துவிட்டதால் 3ஆவது வால்வு வெளியே தெரிகிறது. கடந்த திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் ஐந்தரை அடியாக இருந்தது. அன்று இரவு சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் 44 செ.மீ. மற்றும் அடிவாரத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியது. இதனால், ஐந்தரை அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் எட்டரை அடியாக உயா்ந்தது. கணிசமான நீா்வரத்தால் மே மாதம் வரை குடிநீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. வழக்கம் போல ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினால் அணையின் நீா்மட்டம் ஆகஸ்டில் முழு கொள்ளளவை நெருங்கும் வாய்ப்புள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT