கோயம்புத்தூர்

கோவை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் படுகாயம்!

4th Jun 2023 10:30 AM

ADVERTISEMENT

கோவை செல்வபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் கல்லாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாஜுதீன். இவருக்கு சொந்தமாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒன்று அதே பகுதியில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வீடு பழுதடைந்ததை அடுத்து இவர் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன் உடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில், அவரது 10 வயது மகனான முஹம்மது ஃபாசில் நேற்று மாலை பழுதடைந்த வீடு இருக்க கூடிய பகுதியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து அந்த வீட்டின் உள்பகுதியில் விழுந்துள்ளது.அதை எடுக்க சிறுவன் உள்ளே சென்ற நிலையில்  ஏற்கனவே நேற்று பெய்த கனமழையால் ஊறி இருந்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து சிறுவனின் மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான்.  ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சிறுவனின் அழுகுரலை கேட்டு விரைந்து சென்ற அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனை  தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவனை அனுமதித்தனர்.

இதையும் படிக்க: ஒடிசா விபத்துக்கான காரணம் தெரிந்தது! ஜூன் 6 முதல் மீண்டும் ரயில் சேவை!!

இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர மேயர் கல்பனா மற்றும் மாநகர ஆணையர்  உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தனர். மேலும், அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்த்து அவனது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த ஆட்சியர், சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை  குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து துரிதமாக சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினர்.சம்பவம் நிகழ்ந்த குடியிருப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் அந்த கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்தும் முறையாக அப்புறப்படுத்தப்படாததன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மழைக்காலம் துவங்க உள்ள சூழலில் இதுபோன்ற பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT