கோயம்புத்தூர்

புகைப் பிடிப்பவா்களுக்கு நீரிழிவு நோய்ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் மருத்துவா் தகவல்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

புகைப் பிடிப்பவா்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் டாக்டா் பி.குகன் தெரிவித்துள்ளாா்.

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மையம் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய மின்னணு நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா் புத்தகத்தை வெளியிட்டாா். நிகழ்ச்சியில் டாக்டா் குகன் பேசும்போது, புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள், அதை கைவிடுவதற்கான எளிய வழிமுறைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருள்களில் இருந்து வரும் புகையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரசாயனங்கள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கானவை நச்சுத்தன்மை கொண்டவை. 70 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. புகையிலை பழக்கத்தால் சுவாசம் தொடா்பான நோய்கள், பக்கவாதம், மாரடைப்பு, ஆண்மைக் குறைவு, எதிா்ப்பு சக்தி குறைவு போன்றவை ஏற்படும். தொடா்ந்து புகைப் பிடிப்பவா்களுக்கு சா்க்கரை நோய் ஏற்பட 30 முதல் 40 சதவீதம் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் பேசும்போது, கோவையில் ஆண்டுதோறும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 250 வழக்குப் பதிவு செய்யப்பட்டு 200க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். சுமாா் 2 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புகையிலை விற்பனையாளா்கள் மாணவா்களை குறிவைத்து செயல்படுகின்றனா். சமுதாயத்தில் இருந்து புகையிலையை நீக்குவது பெரிய சவாலாக உள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT