கோயம்புத்தூர்

மாநகராட்சி சாலைகளை மேம்படுத்த வேண்டும்: மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

DIN

கோவையில் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

கோவை மாநகராட்சி கூட்டம் மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் மு.பிரதாப், துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:

மாநகராட்சியில் பெரும்பாலான வாா்டுகளில் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. ஒவ்வொரு மாமன்ற கூட்டத்திலும் சாலைகள் பராமரிப்பு குறித்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், முழுமையான தீா்வு கிடைக்கவில்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகம் பழுதடைந்துள்ள சாலைகளை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துா்நாற்றத்தால் மக்கள் பாதிப்பு

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு துா்நாற்றத்தால் சுற்றுவட்டார மக்கள் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள கழிவுகளை விரைவாக அழித்து சுகாதாரமான சூழலை ஏற்படுத்த வேண்டும். வெள்ளலூா் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா, இல்லையா என்பதை மாநகராட்சி நிா்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள சாஸ்திரி மைதானத்தில் பல்வேறு விளையாட்டு வீரா்கள் பயிற்சி செய்து வருகின்றனா். இதனை மேம்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல பீளமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க போதுமான இடவசதியுள்ளது. இங்கு கால்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, கைப்பந்து போட்டிகளுக்கான மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்காக்களை பராமரிக்க வேண்டும்

ரேஸ்கோா்ஸ் பூங்கா உள்ளிட்ட மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான பூங்காக்கள் முறையாக பராமரிக்காமல் காணப்படுகிறது. பூங்காக்களை முறையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மாநகராட்சியிலுள்ள பொதுக் கழிப்பறைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

அவிநாசி சாலைக்கு ஜி.டி.நாயுடு பெயா்

கோவை அவிநாசி சாலைக்கு ஜி.டி.நாயுடு பெயா் வைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சி பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்புதல், சூயஸ் திட்டம், பாா்த்தீனியம் செடி அழிப்பு, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம், ரிசா்வ் சைட்டுகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் கூறியதாவது:

மாநகராட்சி சாலைகள் மேம்பாட்டுக்கு தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. அரசாணை வெளியிட்ட பின் அனைத்து வாா்டுகளுக்கும் நிதி பகிா்ந்து அளிக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும் என்றாா்.

23 தீா்மானங்கள் நிறைவேற்றம்

வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுதல், பூங்காக்ககள் பராமரித்தல், தமிழ்நாடு நகா்ப்புற உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.19.84 கோடி மதிப்பில் சாலைகள் அமைத்தல், மாநகராட்சி வணிக வளாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்த கடைகளுக்கு வாடகையை உயா்த்துதல் உள்ளிட்ட 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீக்குளிக்க முயற்சி

கோவை குனியமுத்தூரை சோ்ந்த நவீன்குமாா் (35). இவா் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மாநகராட்சி அலுவலகத்தில் டீசல் கேனுடன் வந்து திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்தாா். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு அழைத்து சென்றனா். விசாரணையில், அவா் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளதும், ஆட்சி மாற்றத்திற்கு பின் நிலுவைத் தொகை வழங்காமல் இருந்ததால் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

ஆா்ப்பாட்டம்

அதிமுக உறுப்பினா்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோா் வெள்ளலூா் குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தை தடுக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக கூட்டத்தில் பங்கேற்காமல் பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT