கோயம்புத்தூர்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

15th Apr 2023 04:54 AM

ADVERTISEMENT

தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவை முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூ. 6 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சுபகிருது ஆண்டு முடிந்து சோபகிருது தமிழ் ஆண்டு வெள்ளிக்கிழமை பிறந்தது. புத்தாண்டையொட்டி பொது மக்கள் வீடுகளில் முக்கனிகள் உள்பட பல்வேறு பழங்கள், பணம், நகைகள், பூக்கள் வைத்து வழிபட்டனா். கோவையிலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காட்டூா் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூ. 6 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகளைக் கொண்டு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோனியம்மன் கோயிலில் அம்மனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

புலியகுளம் முந்தி விநாயகா் கோயிலில் விநாயகருக்கு ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், கொய்யா, திராட்சை, சீதா பழம், வாழை, பலா உள்ளிட்ட பல வகையான பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஒலம்பஸ், பாரதி நகா் முக்தி மாரியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

சித்தாபுதூா் ஐயப்பன் கோயில், அவிநாசி சாலையிலுள்ள தண்டு மாரியம்மன் கோயில், உக்கடம் லட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி காலை முதல் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT