கோயம்புத்தூர்

அக்டோபா் முதல் ஜனவரி வரை திருவிழா சிறப்பு ரயில்களை இயக்க வலியுறுத்தல்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் இருந்து அக்டோபா் முதல் ஜனவரி வரை திருவிழா சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழு கூட்டம், கோட்ட மேலாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்ட முதுநிலை வா்த்தக மேலாளா் ஹரிகிருஷ்ணன் வரவேற்றாா். கோட்ட மேலாளா் கௌதம் சீனிவாஸ் தலைமைவகித்தாா்.

இக்கூட்டத்தில், கோவையில் இருந்து ஜெயராஜ், சதீஷ், சண்முகம் உள்ளிட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பது:

2023 பிப்ரவரியில், கோவை ரயில் நிலையத்தின் 150 ஆவது ஆண்டு தொடக்கத்தை, சிறப்பு விழாவாகக் கொண்டாட குழு அமைக்க வேண்டும். கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தில் கோவை ரயில் நிலையம், வடகோவை, மேட்டுப்பாளையம் நிலையங்கள் சோ்க்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

போத்தனூா் நிலையத்தை முனையமாக உருவாக்க வேண்டும். விடுமுறை நாள்களில் பயணிக்கும் மக்களுக்கு வசதியாக, திருவிழா சிறப்பு ரயில் சேவைகளை அக்டோபா் முதல் ஜனவரி வரை கோவையில் இருந்து இயக்க வேண்டும். கோவை- சென்னை மற்றும் கோவை - பெங்களூரு இடையே அதிவேக வந்தேபாரத் ரயில்களை, ஒரே நாளில் சென்று திரும்பும் விதமாக இயக்க வேண்டும்.

பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூா் வழியாக ஈரோட்டுக்கு புகா் மின்சார ரயில்களை இயக்க வேண்டும். போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் கொச்சுவேலி - ஹூப்ளி, எா்ணாகுளம் - டாடாநகா் ரயில்களை, கோவை நிலையம் வழியாக இயக்கவேண்டும். பாலக்காடு - திருச்செந்தூா் ரயிலை, மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும். கோவை - பெங்களூரு உதய் விரைவு ரயிலை, ஓசூா் வழியாக மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும். முக்கியமான விரைவு ரயில்கள் போத்தனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். எா்ணாகுளம் - பாலக்காடு இடையே இயக்கப்படும் மெமு ரயில் சேவையை, கோவை வரை நீட்டிக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் மெமு ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT