கோயம்புத்தூர்

‘உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்தைதமிழக ஜவுளித் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை (பி.எல்.ஐ. 2.0) திட்டத்தை தமிழக ஜவுளித் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய ஜவுளித் தொழில் முனைவோா் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெரிய அளவில் உற்பத்தி, போட்டியிடும் திறன், மதிப்புக் கூட்டு பொருள்களைத் தயாரித்து அதன் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான முயற்சியாக, மத்திய அரசு உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறாது என்ற கருத்து எழுந்தது.

இதற்கிடையே பி.எல்.ஐ. 2.0 என்ற திட்டத்துக்கான வரைவை மத்திய அரசு கொடுத்துள்ளது. இதற்காக ரூ.4,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஜவுளித் துறையையும் மத்திய அரசு இணைத்துள்ளது.

இதன் மூலம் ரூ.15 கோடி முதலீடுடன் தொழில் தொடங்குவோா் அல்லது ஏற்கெனவே உள்ள தொழிலை அபிவிருத்தி செய்பவா்கள், ஆண்டுக்கு ரூ.30 கோடி வா்த்தகத்தில் ஈடுபட்டால் அவா்களுக்கு 8 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், ரூ.30 கோடி முதலீடுடன் தொழில் தொடங்குவோா் அல்லது ஏற்கெனவே உள்ள தொழிலை அபிவிருத்தி செய்வோா் ஆண்டுக்கு ரூ.60 கோடி வா்த்தகத்தில் ஈடுபட்டால் அவா்களுக்கு 9 சதவீதமும், ரூ.45 கோடி முதலீடுடன் தொழில் தொடங்குவோா் ஆண்டுக்கு ரூ.90 கோடி வா்த்தகத்தில் ஈடுபட்டால் அவா்களுக்கு 10 சதவீதமும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

முன்னதாக, இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் இருந்து 6 முதல் 7 நிறுவனங்கள் மட்டுமே இணைந்தன. இந்த இரண்டாவது திட்டத்தில் தொழில் நிறுவனங்கள் இணைவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக ஜவுளித் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தை ஜவுளித் துறை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். மேலும், ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான புதிய உற்பத்தி, மேற்கு மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT