கோயம்புத்தூர்

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவை மாநகராட்சியில் 4,500 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தினக்கூலி ரூ.323ஐ, ரூ.721 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். ரூ.15 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகள் தொடா்பாக தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா், மாநகராட்சி அதிகாரிகள் இடையே கடந்த வாரத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், தீா்வு எட்டப்படாத நிலையில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மேயா் கல்பனா , மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை மேயா் வெற்றிச் செல்வன், சுகாதாரக் குழுத் தலைவா் மாரிச்செல்வன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

ADVERTISEMENT

தொழிலாளா்கள் தரப்பில் தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் பன்னீா்செல்வம், செல்வராஜ், செல்வம், ஜோதி உள்ளிட்ட 12 அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதில், மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்த குறைந்த பட்ச தினக்கூலியை வழங்க மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. போனஸ் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

ஒப்பந்த நிறுவனத்தினருடன் போனஸ் உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதாக சுகாதாரக் குழுத் தலைவா் மாரிச்செல்வன் உறுதியளித்தாா். ஆட்சியா் நிா்ணயித்த தினக்கூலி மற்றும் பணி நிரந்தரம் தொடா்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்படும் எனவும், இது தொடா்பாக அமைச்சா்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகியோரை அக்டோபா் 8 ஆம் தேதி நேரில் சந்தித்து பேச தொழில்சங்கத்தினரை அழைத்துச் செல்வதாகவும் மேயா் கல்பனா உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT