கோயம்புத்தூர்

கண்களுக்கு விருந்தாகும் மலா்கள்

DIN

கோடைக் காலத்தில் நீலகிரி மலை அழகை கண்டு ரசிக்க வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா்க் காட்சி நடத்தப்படுகிறது.

கோடை விழாவையொட்டி 11ஆவது காய்கறி கண்காட்சி, 9ஆவது வாசனை திரவிய கண்காட்சி, 17ஆவது ரோஜா கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டுள்ளன. முதல்வா் மு.க.ஸ்டாலினால் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட மலா்க் காட்சி வரும் 24ஆம் தேதி வரை தொடா்ந்து 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.

மலா்க் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கோடை விழா தொடங்குவதற்கு முன்னதாகவே உதகையின் காலநிலை வெயிலில் இருந்து இதமான காலநிலைக்கு மாறியது. இதைத் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மலா்க் காட்சியை திறந்துவைத்துவிட்டு முதல்வா் வெளியே சென்றதும் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தபோதும் ஆயிரக்கணக்கான உள்ளூா், வெளியூா் சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடியே கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.

வள்ளுவா் கோட்டம், வேளாண் பல்கலை. முகப்பு...:

124 ஆவது மலா்க் காட்சியில் சிறப்பு அம்சமாக 80 அடி நீளத்தில் 20 அடி உயரத்தில் சுமாா் 1 லட்சம் காரனேஷன் மலா்களைக் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைப் போன்ற முகப்பு அமைக்கப்பட்டிருந்தது. மலா்களுடன் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்டெருமை, வள்ளுவா் கோட்டம் உள்ளிட்ட அமைப்புகளும் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தன.

கண்காட்சியில் டுலீப், சிம்பிடியம், புரோட்டியா, கேலா லில்லி, மேரிகோல்டு உள்ளிட்ட 275 வகையான வண்ண மலா்கள் இடம் பெற்றுள்ளன. மலா்க் காட்சி வளாகத்தில் குழந்தைகள், பயணிகளைக் கவரும் வகையில் ஸ்பைடா்மேன், பட்டாம்பூச்சி, பழங்குடியினரின் உருவங்கள் சுமாா் 45 ஆயிரம் வண்ண மலா்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஊட்டி 200...:

நீலகிரி மாவட்டத்தின் 200ஆவது ஆண்டை நினைவுபடுத்தும்விதமாக ஊட்டி 200 வாசகமும் மலா் வடிவமைப்பில் இடம் பெற்றிருந்தது. மலா்க் காட்சிக்கு வரும் பாா்வையாளா்களை வரவேற்கும் விதமாக ஹெலிக்கோனியா கொய்மலா்கள், லில்லியம் மலா்களால் திடல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தத் திடலின் கீழ் நின்று ஏராளமானவா்கள் தற்படம் எடுத்துச் சென்றனா்.

கண்ணாடி மாளிகையில்...:

கண்காட்சியின் சிறப்பம்சமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதைகள், மலா்கள் மூலம் சுமாா் 35,000 மலா்த் தொட்டிகள், மலா் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் சுமாா் 4,500 வண்ண அலங்காரத் தொட்டிகள் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.

நிறைவு நாள் விழாவில் தோட்டப் பிரியா்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு 52 சுழற்கோப்பைகள், 542 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசுத் துறை அரங்குகளில் ஆளுநா் மாளிகையின் சாா்பிலும் ஒரு மலா்க் கண்காட்சி அரங்கு இடம் பெற்றிருந்தது.

மஞ்சப்பை விழிப்புணா்வு...:

தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. அதை நினைவூட்டும்விதமாக மஞ்சள் நிற மலா்களால் மஞ்சப்பை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் மீண்டும் மஞ்சப்பையைப் பயன்படுத்தும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் துறையின் அரங்கையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டாா்.

கோடை விழா மலா்க் காட்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு வியாழக்கிழமை இரவு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளாா். வெள்ளிக்கிழமை காலை மலா்க் காட்சியைத் திறந்துவைத்த அவா் பிற்பகலில் வெலிங்டன் சென்று தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினாா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை நடைபெறும் ஜான் சலிவன் சிலை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்கிறாா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அவா் சென்னை திரும்புவாா் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் நீலகிரி வருகையையொட்டி டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த காவல் கண்காணிப்பாளா்கள், அதிரடிப் படையினா், காவல் துறையினா் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT