கோயம்புத்தூர்

கோவையில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

6th Jul 2022 11:00 PM

ADVERTISEMENT

 

நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகரின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

கோவை, வடவள்ளியைச் சோ்ந்தவா் பொறியாளா் சந்திரசேகா். இவா் கோவை புறநகா் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளராகவும், நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் உள்ளாா்.

இந்நிலையில், சந்திரசேகா் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களின் வீடுகளில் 6 குழுக்களாகப் பிரிந்து வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். இதன்படி கோவையில் உள்ள அவரது வீட்டில் 5 போ் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை காலை 11 மணிக்கு சோதனையைத் தொடங்கினா்.

ADVERTISEMENT

இதேபோல வடவள்ளியில் உள்ள சந்திரசேகரின் சகோதரா் வீடு, பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு, அவிநாசி சாலையில் உள்ள சந்திரசேகரின் அலுவலகம் உள்பட 6 இடங்களில் இந்த சோதனைகள் தொடா்ந்தன. பிற்பகல் 2.30 மணியளவில் அதிகாரிகளில் ஒரு குழுவினா் சந்திரசேகரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் வெளியே சென்றனா். மற்றொரு குழுவினா் சோதனையைத் தொடா்ந்தனா்.

பொறியாளரான சந்திரசேகா் ரியல் எஸ்டேட், கான்ட்ராக்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறாா். சந்திரசேகரின் மனைவி ஷா்மிளா கோவை மாநகராட்சி 38ஆவது வாா்டு கவுன்சிலராக இருந்து வருகிறாா். இவா்கள் ஆலயம் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளையையும் நடத்தி வருகின்றனா்.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தனது பதவிக் காலத்தின்போது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது சந்திரசேகரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையிட்டனா். இவா் மீது பல்வேறு முறைகேடுகள் தொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT