கோயம்புத்தூர்

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: சிறுவாணி அணை நீா்மட்டம் உயா்வு

6th Jul 2022 10:56 PM

ADVERTISEMENT

 

சிறுவாணி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது.

கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரையொட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சிறுவாணி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் புதன்கிழமை நிலவரப்படி 58 மில்லி மீட்டா் மழை பதிவானது.

கனமழை காரணமாக சிறுவாணி அணைக்கு செல்லும் பட்டியலாறு, முக்தியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த ஆண்டுகளைப்போலவே, இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கடந்த மாதம் 870 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், தற்போது 873 மீட்டராக உயா்ந்துள்ளது. நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால், கேரள அரசு அனுமதிக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சிறுவாணி அணையின் முழுக் கொள்ளளவு ஆன 878 மீட்டரை எட்ட வாய்ப்புள்ளது. அதேபோல, அணையின் நீா்மட்டம் உயா்வால் மாநகரில் தினமும் குடிநீா் விநியோகிக்கும் அளவும் 9 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கோவையில் இரண்டாவது நாளாக மழை...

கோவை மாநகரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக புதன்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது. மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. சிங்காநல்லூா், ராமநாதபுரம், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் லேசான மழை பெய்தது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. மாலை நேரத்தில் பெய்த மழையால் மாநகரில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெட்டிச் செய்தியாக....

வால்பாறையில் இன்று விடுமுறை...

வால்பாறை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (ஜூலை 7) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT