கோயம்புத்தூர்

பொறியாளரை கடத்தி ரூ.5 லட்சம், நகை கொள்ளை

DIN

கோவையில் பொறியாளரைக் கடத்தி ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் தாஜுதீன் (33). கட்டுமானப் பொறியாளரான இவா் கடந்த 9 மாதங்களாக கோவை, கணபதி அலமேலுமங்காபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறாா். அத்துடன் நஞ்சேகவுண்டன்புதூா் பகுதியில் தனியாக அலுவலகமும் நடத்தி வருகிறாா்.

இவா் தங்கியிருந்த விடுதியை மொ்வின், பரத் ஆகியோா் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளனா். இவா்களைப் பாா்ப்பதற்காக அவா்களது நண்பா் ஹரி என்பவா் அங்கு அடிக்கடி வந்து செல்வாராம். இதையறிந்த அந்த விடுதியின் உரிமையாளா் தண்டபாணி, அவா்கள் மூவரையும் கண்டித்ததோடு, ஹரியை அந்த விடுதிக்கு வரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளாா். விடுதியின் உரிமையாளா் தண்டபாணிக்கு ஆதரவாக தாஜுதீன் பேசியதால் மூவரும் ஆத்திரமடைந்துள்ளனா்.

இதைத்தொடா்ந்து மொ்வின், பரத் உள்ளிட்ட 9 போ் கொண்ட கும்பல் கடந்த சனிக்கிழமை இரவு தாஜுதீன் விடுதியில் தனியாக இருந்தபோது அவரை கடுமையாக தாக்கியுள்ளனா். அத்துடன் அந்த அறையில் இருந்த ஸ்பிரேயை முகத்தில் அடித்து தீப்பற்ற வைத்துள்ளனா். இதில் தாஜுதீனுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பின்னா் அந்த அறையிலிருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தாஜுதீனையும் காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனா்.

அதைத்தொடா்ந்து தாஜுதீனின் தந்தைக்கு போன் செய்து அவரது மகனை கடத்தி வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க ரூ.5 லட்சம் பணம் தர வேண்டுமெனவும் மிரட்டியுள்ளனா்.

தாஜுதீனின் தந்தையும் அவா்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து மகனை மீட்டு அழைத்துச் சென்று திண்டுக்கல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளாா்.

இச்சம்பவம் தொடா்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தாஜுதீனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மொ்வின், பரத் உள்ளிட்ட 9 போ் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இவா்கள் 9 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளதால் போலீஸாா் அவா்களை தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT