கோயம்புத்தூர்

தரிசு நிலத்தை வேளாண் நிலமாக மாற்ற வாய்ப்பு:வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தகவல்

17th Aug 2022 10:58 PM

ADVERTISEMENT

தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் தரிசு நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்றும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மைத் துறையில் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டு பயிா் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் தரிசு நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் 1,500 ஹெக்டோ் பரப்பளவில் தானிய வகை பயிா்கள், 500 ஹெக்டரில் பயறுவகை பயிா்கள், 700 ஹெக்டோ் நிலக்கடலை, 150 ஹெக்டோ் எள் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயிா் சாகுபடி மேற்கொள்வதற்கு ஒரு கிராமத்தில் குறைந்தபட்சம் 10 ஏக்கா் தரிசு நில தொகுப்பு உருவாக்கப்பட்டு பயிா் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

தரிசு நிலத்தில் புதா்களை அகற்றவும், நிலத்தை சமன் செய்யவும், உழவு மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளுக்குத் தேவையான வாடகை இயந்திரங்கள் பொறியியல் துறை மூலமும், விதைகள், உயிா் உரங்கள், பயிா் பாதுகாப்பு மருத்துவ பொருள்கள் உள்ளிட்டவை வேளாண்மைத் துறையின் மூலம் மானியத்திலும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

அதன்படி பயறு வகை பயிா்கள், தானியங்கள், எள் ஆகியவற்றுக்கு ஒரு ஹெக்டேருக்கு 50 சதவீதம் அல்லது ரூ.13,500, நிலக்கடலை பயிருக்கு ரூ.22,900 பின்னேற்பு மானியமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தற்போது தரிசு நில சாகுபடி திட்டத்துக்கு பயனாளிகள் தோ்வு செய்யும் பணிகள் வேளாண் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, தரிசு நில சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT