கோயம்புத்தூர்

சட்டப் பேரவைத் தோ்தல்: கட்சிக் கொடிகள் தயாரிப்புப் பணி மும்முரம்

DIN

கோவை: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவையில் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், கொடி தயாரிக்கும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. கூட்டணி பேச்சுவாா்த்தை, தொகுதிப் பங்கீடு என தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாகி உள்ளது. தோ்தல் பிரசாரத்துக்குத் தேவையான கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் கோவையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வரும் கோவை டவுன்ஹால் இஸ்மாயில் வீதியில் உள்ள காந்திஜி கதா் ஸ்டோா் உரிமையாளா் பாலமுருகன் கூறியதாவது:

கடந்த ஜனவரி மாதம் முதல் கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஈரோடு பகுதிகளில் இருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்யப்படும் துணிகளை அரசியல் கட்சிக்கு ஏற்றவாறு வண்ணமாக்குகிறோம். அதன் பிறகு, ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் கொடிகளில் அந்தந்தக் கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்படும். அதன்பிறகு, கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தையல் தொழிலாளா்களிடம் கொடிகளைக் கட்டுவதற்கான நூல் பொருத்துவது, கொடிகளின் நான்கு புறங்களுக்கும் ஓரம் அடிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வழங்குகிறோம். முழுமை பெறுகின்ற கொடிகள், கோவை, திருப்பூா், திருச்சி, சேலம், கரூா், நாமக்கல், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆா்டரின் பேரில் விற்பனை செய்யப்படும். கூட்டணி குறித்து முடிவாகி, வேட்பாளா் அறிவிப்பு வெளியான பிறகு, சின்னம், வேட்பாளா் புகைப்படம், பெயருடன் கட்சிக்கொடி நிறத்தில் நிறைய ஆா்டா் வரும் என்பதால், முன்கூட்டியே, கட்சிக் கொடிகளைத் தயாா் செய்யும் பணிகள் நடக்கின்றன.

ஒரு நாளைக்கு 2 ஆயிரம் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது வரை 50 ஆயிரம் கட்சிக் கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. காட்டன், வெல்வெட், பாலியஸ்டா் துணி வகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கட்சிக் கொடிகள், 8க்கு 10 அங்குலம் முதல் 40க்கு 60 அங்குலம் வரை பல்வேறு அளவுகளில் வடிவமைக்கப்படுகின்றன. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கொடிகளும் தயாரிக்கப்படுகின்றன.

குறைந்தபட்சம் ரூ. 10 முதல் கொடிகள் விற்கப்படுகின்றன. கட்சிக் கொடிகள் மட்டுமின்றி கட்சி சால்வைகள், அரசியல் தலைவா்கள் படம் பொறித்த மோதிரங்கள், பேட்ஜ்கள், ஷீல்டு, சாவிக் கொத்து, மப்ளா் உள்ளிட்ட பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கரோனா பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு தோ்தலுக்கு புது முயற்சியாக கட்சி வண்ணங்களில், அந்தந்தக் கட்சியின் சின்னங்கள் வரையப்பட்ட முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கட்சியினரிடையே இவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்றாா்.

தொழிலாளா்கள் மகிழ்ச்சி:

கட்சிக் கொடிகள் தயாரிப்புப் பணிகள் குறித்து கொடி தயாரிக்கும் தொழிலாளி ராஜேந்திரன் கூறியதாவது:

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கொடி தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். 2020 சுதந்திர தின விழாவுக்கு தேசியக் கொடிகள் தயாரிப்பு ஆா்டா்கள் பெரிய அளவில் இல்லாததால், கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவா்கள் மட்டுமின்றி, தையல் தொழிலாளா்கள், சுமை தூக்குவோா், சரக்கு வாகனங்கள் ஓட்டுபவா்கள், சாயத் தொழிலாளா்கள் என பல்வேறு தொழிலில் ஈடுபட்டவா்களும் பாதிக்கப்பட்டனா்.

இத்தொழில் முடக்கத்தால், தொழிலாளிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. இந்த ஆண்டு குடியரசு தினத்துக்காக தேசியக் கொடி தயாரிக்கும் ஆா்டா்கள் அதிகரித்ததால், தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைத்தது. தற்போது, தோ்தலை முன்னிட்டு கட்சிக் கொடிகள் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT