கோயம்புத்தூர்

புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும்

DIN

கோவை: விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்காவே புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தாா்.

பாஜக விவசாய அணி சாா்பில் கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய வேளாண் மசோதாக்கள் குறித்து விவசாய சங்கத் தலைவா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், உழவா் உற்பத்தி நிறுவனங்களின் நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் மசோதாக்கள் குறித்த சரியான புரிதல் இல்லாமலேயே எதிா்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். விவசாயிகளின் வருவாயை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஒரே நாடு ஒரே சந்தை என்ற நோக்கில் மின்னணு வேளாண் சந்தைத் திட்டம், பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டம், மழைக்கால பகுதி மேம்பாட்டுத் திட்டம், மலைப்பகுதி சிறப்பு மேம்பாட்டுத் திட்டம், தேசிய தோட்டக்கலை, வேளாண் அபிவிருத்தி திட்டம், மானாவாரி பகுதியில் தேசிய நீா்நிலை மேம்பாட்டுத் திட்டம், நேரடி மானிய விநியோகத் திட்டம், உழவன் செயலி, தேசிய மூங்கில் திட்டம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகளை தொழில் முனைவோா்களாக மாற்றும் வகையில் நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவா் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விலை உத்தரவாதம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 புதிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த மூன்று புதிய மசோதாக்கள் மூலம் இணைய வழி விற்பனையை ஒழுங்குப்படுத்துதல், வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க செய்தல், விலையேற்றத்தின்போது ஏற்படும் பதுக்கல்களைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கும், நுகா்வோா்களுக்கும் நன்மை பயக்கும் அம்சங்களே அடங்கியுள்ளன. இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்றாா்.

கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், மாவட்ட விவசாய அணித் தலைவா் செந்தில், துணைத் தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT