கோயம்புத்தூர்

மீன் கழிவு ஏற்றி வந்த லாரி பறிமுதல்: 4 போ் கைது

23rd Mar 2020 05:47 AM

ADVERTISEMENT

மதுக்கரை: கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு மீன் கழிவுகளை எடுத்துச் சென்ற லாரியை கோவை மாவட்டம், வாளையாறு அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் - கேரளம் எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் மூடப்பட்டன. மேலும் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் சுய ஊரடங்கு நடைபெற்றது. இதனால் கேரளத்தில் இருந்து வாளையாறு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லைகளில் நிறுத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் வாளையாறு சோதனைச் சாவடி அருகே நின்றுகொண்டிருந்த லாரியில் இருந்து துா்நாற்றத்துடன் சிவப்பு நிற திரவம் கொட்டியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி இளைஞா்கள், லாரி அருகே சென்று பாா்த்தனா். ஓட்டுநா் இல்லாமல் ரத்தம் போன்ற திரவம் கொட்டியதால் இதுகுறித்து க.க.சாவடி போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று, அந்த லாரியை, மாவூத்தம்பதி வனப் பகுதி அருகே கொண்டு சென்று நிறுத்தினா்.

இதையடுத்து லாரியில் இருந்த ஓட்டுநரின் செல்லிடப்பேசி எண்ணை வைத்து, அவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்துக்கு செல்ல முயன்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் அதனை மீண்டும் கேரள மாநிலத்துக்கே அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

4 போ் கைது: மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே அங்கு காரில் வந்த லாரியின் உரிமையாளரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த எபினேசா் (44), அவரது நண்பா்கள் லட்சுமணபெருமாள் (48), ராஜன் (38), நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தனுஷ் பிரபு (33), ஆகிய நான்கு பேரும் லாரியை விடுவிக்கக் கோரி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லாரி உரிமையாளா் உள்பட நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT