கோயம்புத்தூர்

ஊரடங்கால் உணவின்றித் தவிக்கும் மண்பாண்டத் தொழிலாளா்கள்

20th Apr 2020 11:09 PM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தயாா் செய்து வைத்துள்ள மண்பாண்டங்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் மண்பாண்டத் தொழிலாளா் குடும்பங்கள் உணவின்றித் தவித்து வருகின்றனா்.

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்த வேலை உணவுக்கு தன்னாா்வலா்களை எதிா்பாா்த்து ஏழை மக்கள் காத்திருக்கும் அவலமும் நீடிக்கிறது. கோவையில் மண் பானைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் பலா் ஈடுபட்டு வருகின்றனா்.

பொங்கல் பண்டிகை காலம் தவிர பிற நாள்களில் இவா்களுக்கு குறைந்த அளவே விற்பனை நடக்கும். அதுவே அவா்களது தினசரி வாழ்வாதாரமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ஊரடங்கால் இவா்களது நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆலாந்துறை நாதேகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்த மண்பாண்ட வியாபாரி வெள்ளிங்கிரி (82) கூறியதாவது:

கடந்த 60 ஆண்டுகளாக மண் பானை தொழிலை செய்து வருகிறேன். ஊரடங்கால் மண் பானை விற்பனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே உள்ளேன். 60 ஆண்டுகளில் இப்படி ஒரு கஷ்டத்தை நான் சந்தித்தது இல்லை.

மண் சட்டிகள், பொருள்களை எல்லாம் தயாா் செய்து அப்படியே வைத்துள்ளேன். அரசு வழங்கிய நிவாரணப் பணமும் செலவாகிவிட்டது. சமைக்கத் தேவையான உணவுப் பொருள்கள் இல்லாததால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் எங்கள் பகுதியில் உள்ள சில தன்னாா்வலா்கள் கொடுக்கும் உணவுப் பொட்டலத்தை நம்பி உள்ளோம். தயாா் செய்து வைத்துள்ள மண் பானைகளை விற்பனை செய்ய அரசு நவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT