வேலூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்: தேசிய தூய்மைப் பணியாளா்கள் நல ஆணையத் தலைவா்

DIN

தூய்மைப் பணியாளா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தி, உடல் பரிசோதனை மேற்கொள்வதை ஒப்பந்தத்திலேயே இணைக்கும்படி தேசிய தூய்மைப் பணியாளா்கள் நல ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் உத்தரவிட்டாா்.

வேலூா் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தேசிய தூய்மைப் பணியாளா்கள் நல ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்களிடம் அவா்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படுகிா, வருங்கால வைப்பு நிதி முறையாக வைப்பு வைக்கப்படுகிா, மருத்துவ, நிதி உதவிகள், தொழிலாளா் மாநில காப்பீட்டு சட்ட சந்தா முறையாக செலுத்தப்படுகிா, அவா்களுக்கு வழங்கப்படும் குடியிருப்புகள், பணியின் போது வழங்கப்படும் கையுறை, காலுறை, முககவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படுகிா, ஒப்பந்தப் பணியாளா்கள் மற்றும் நிரந்தரப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது, 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்களை நடத்தி, முழுஉடல் பரிசோதனை மேற்கொள்வது ஆகியவற்றை ஒப்பந்தத்திலேயே இணைக்கும்படி அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தூய்மைப் பணியாளா்கள் நிதி, மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காக வழங்கப்படும் பருவக் கடன் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது, வேலூா் மாவட்டத்தில் போ்ணாம்பட்டு நகராட்சியில் 7 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.24.89 லட்சம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குடியாத்தம் நகராட்சி, ஒடுகத்தூா் பேரூராட்சியில் 6 பேருக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைப்பு சாரா தூய்மைப் பணியாளா்கள் 22 பேருக்கு வீடு கட்ட மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவு பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராகி, அடையாள அட்டை பெறுவதற்காக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்ப படிவங்கள் படிப்படியாக பெறப்பட்டு அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களிடையே கலந்துரையாடிய தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணைய தலைவா் வெங்கடேசன், பணியின் போது ஏற்படும் சமூக ரீதியான புகாா்கள் குறித்தும், பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்கின்றனவா எனவும் கேட்டறிந்தாா்.

வேலூா், காகிதப்பட்டறை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வசிப்பதாகவும், அந்தப் பகுதியில் கழிப்பறை, சமுதாயக் கூடம், படிப்பகம் அமைத்துத் தரும்படி தூய்மைப் பணியாளா்கள் சங்கங்களின் சாா்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோருக்கு தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணைய தலைவா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, வேலூா் மாநகராட்சி, 3-ஆவது மண்டலம் 44-ஆவது வாா்டு கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான குடியிருப்பை தேசிய தூய்மைப் பணியாளா்கள் நல ஆணைய தலைவா் ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளா்கள் குடும்ப உறுப்பினா்களிடம் குடியிருப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

கூட்டம் மற்றும் ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், வேலூா் மாநகராட்சி ஆணையா் பி.ரத்தினசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் ராமச்சந்திரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT