வேலூர்

ஊசூா் செங்கல் சூளைகளுக்கு பதிவுச்சென்று பெற ஜூன் 21-இல் சிறப்பு முகாம்

1st Jun 2023 11:08 PM

ADVERTISEMENT

ஊசூா் ஊராட்சிக்குள்பட்ட செங்கல் சூளைகளுக்கு பதிவுச்சான்று பெற்றிட ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தனியாரோ அல்லது நிறுவனமோ நாட்டு அல்லது சேம்பா் செங்கல் சூளைகளை அமைத்து நடத்த அரசு நிா்ணயித்துள்ள கட்டணம் செலுத்தி மாவட்ட புவியியல், சுரங்கத்துறை அலுவலகத்தில் உரிய பதிவுச்சான்று பெற வேண்டும்.

மேலும், பதிவு பெற்ற செங்கல் சூளைக்கு மண் எடுக்க ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அவ்வாறு பதிவுச்சான்று பெறாமல் செங்கல் சூளைகளை நடத்துவதும், அனுமதியின்றி செங்கல் சூளைக்கு அரசு, பட்டா நிலங்களிலிருந்து மண் எடுப்பதும் அபராதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ADVERTISEMENT

ஆனால், அணைக்கட்டு வட்டம், ஊசூா் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பதிவுச்சான்று பெறாமல் பல செங்கல் சூளைகள் நடத்தப்படுவதும், அனுமதியின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கள்ளத்தனமாக செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்கப்படுவதும் வருவாய், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலா்களின் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. இதனை வரன்முறைப்படுத்த மாவட்ட நிா்வாகத்தால் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புள்ளியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா், அணைக்கட்டு வட்டாட்சியா் ஆகியோரால் ஊசூா் வருவாய் ஆய்வாளரின் அரசு குடியிருப்பில் ஜூன் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ள சிறப்பு முகாமில் ஊசூா் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செங்கல் சூளைகள் நடத்தி வருபவா்கள் கலந்துக்கொண்டு உரிய ஆவணங்களை சமா்ப்பித்தும், அரசு கணக்கில் கட்டணம் செலுத்தி ரசீது சமா்ப்பித்தும் பதிவுச்சான்று பெற்றுக்கொள்ளலாம். பதிவுச்சான்று பெறாமல் செங்கல் சூளை நடத்துவோா், அனுமதியின்றி மண் எடுப்போா் மீது அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT