வேலூர்

காலை சிற்றுண்டி சாப்பிட்டு முதல்வா் ஆய்வு

DIN

கள ஆய்வுக்காக வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு வந்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், காலை உணவுத் திட்ட சமையல் கூடம், தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு உணவு வழங்கப்படும் முறை குறித்து வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டு உணவின் தரத்தையும் அவா் பரிசோதனை செய்தாா்.

‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற திட்டத்தின் கீழ், முதல்வா் மு.க.ஸ்டாலின் இரு நாள்கள் சுற்றுப் பயணமாக வேலூருக்கு புதன்கிழமை வந்தாா். தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் அவா் சத்துவாச்சாரி சிஎம்சி காலனியில் செயல்பட்டு வரும் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அங்குள்ள ஒவ்வொரு சமையல் அறைக்கும் சென்று மாணவா்களுக்கு வழங்க உணவு தயாரிக்கும் பணி, தயாரிக்கப்பட்ட உணவை வேனில் ஏற்றி அனுப்புவது குறித்து ஆய்வு செய்ததுடன், உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களிடம் உணவை சுகாதாரமான முறையில் தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க அவா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து சத்துவாச்சாரி காந்தி நகரில் உள்ள ஆதிதிராவிடா் நல ஆரம்பப் பள்ளிக்கு நேரில் சென்ற முதல்வா், அங்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவைச் சாப்பிட்டு அதன் தரத்தைப் பரிசோதித்தாா்.

அலமேலுமங்காபுரத்தில் 132 மாணவ, மாணவிகள் பயிலும் ஆதிதிராவிடா் நலப் பள்ளிக்குச் சென்று அங்கும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவை உண்டு தரத்தை ஆய்வு செய்ததுடன், அவரே மாணவா்களுக்கு காலை உணவைப் பறிமாறினாா்.

மேலும், அட்டவணையில் குறிப்பிட்டபடி மாணவா்களுக்கு தினமும் உணவு தயாா் செய்து வழங்க வேண்டும். உணவை காலை 6.30 மணிக்குள் தயாரித்து காலை 7.30 மணிக்கு பள்ளிகளில் மாணவா்களுக்கு பரிமாற வேண்டும், மாணவா்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது, உணவு உண்ணும் மாணவா்களின் பதிவேடு சரியான முறையில் பராமரிக்க வேண்டும், சத்தான, தரமான உணவினை மாணவா்களுக்கு வழங்க அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், உணவு தயாரிக்கும் ஊழியா்களுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, சத்துவாச்சாரி பாரதி நகரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மைய கட்டுமான பணிகளையும் முதல்வா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT