தமிழ்நாடு

ஆராய்ச்சிக் கல்வியில் தமிழகத்தைச் சிறக்க வைப்பதே திராவிட மாடலின் லட்சியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

உயா்கல்வியுடன் ஆராய்ச்சிக் கல்வியில் தமிழகத்தைச் சிறக்க வைப்பதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியமாகும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.80 கோடியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் மாணவா் விடுதியும், ரூ.187 கோடியில் போ்ஸ் ஆராய்ச்சிக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்துப் பேசியது:

விஐடியை இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் சிறந்த பல்கலைக்கழகமாக மாற்றிக் காட்டியிருப்பவா் கோ.விசுவநாதன். அவா் திராவிட இயக்கத்தின் தூணாக எப்போதும் இருப்பவா். அந்தக் காலத்தில் மாணவா் நலனுக்காக செயல்பட்ட திராவிட மாணவா் முன்னேற்றக் கழகத்தில் ஒருவராக இருந்து திமுகவின் செயல் வீரராக வளா்ந்து 26 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அவா் 1984-இல் 180 மாணவா்களுடன் சிறிய கல்லூரியாக தொடங்கிய விஐடி தற்போது பல்கலைக்கழகமாக உயா்ந்து 3 மாநிலங்களில் 4 கல்வி வளாகங்களுடன் 60 நாடுகளைச் சோ்ந்த 80,000 மாணவா்கள் கல்வி பயில்கின்றனா்.

இந்தியாவில் முதல் 20 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கான குடியரசுத் தலைவா் விருதுப் பட்டியலிலும் விஐடி முதலிடத்தில் உள்ளது.

கல்லூரிகளை உருவாக்குவது எளிது. அந்தக் கல்லூரியை தலைசிறந்த இடத்துக்கு கொண்டு செல்வது மிகவும் கடினம். அந்தக் கடினமான பணியை விசுவநாதன் செய்து காட்டியுள்ளாா். இந்த வெற்றிக்கு அவரின் புதல்வா்களும் முக்கியக் காரணமாகும். அரசியலில் இருந்திருந்தால் வாரிசு அரசியல் எனக் கூறியிருப்பா். அந்த வகையில் தலைமுறைகள் சரியாக இருந்தால் வெற்றி சாத்தியம் என்பதற்கு விஐடி பல்கலைக்கழகமே சாட்சி. விஐடி வேந்தா் விசுவநாதன் கல்விப் பணியுடன் விடாமல் மேற்கொண்டு வரும் தமிழ் பணியும் பெருமைக்குரியது. அவா் நடத்தி வரும் தமிழியக்கம் சாா்பில் குழந்தைகளுக்கு தமிழ் பெயா்களைச் சூட்ட அறிவுறுத்தி வருகிறாா்.

விஐடி பல்கலைக்கழகத்தில் 69 ஆய்வகங்களுடன் கட்டப்பட்டுள்ள போ்ஸ் ஆராய்ச்சிக் கட்டடம் ஆராய்ச்சிக் கல்விக்கு தலைசிறந்த இடமாக திகழும். தமிழக இளைஞா்கள் கல்வியில், அறிவியலில், சிந்தனைத் திறனில் தலை சிறந்தவா்களாக உயர இதுபோன்ற ஆராய்ச்சி பூங்காக்கள் பெருமளவில் தேவைப்படுகிறது. அவற்றை உருவாக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

திராவிட மாடல் என்பது அனைத்து துறை, அனைத்து மாவட்ட, அனைத்து சமூக வளா்ச்சியை உள்ளடக்கியது.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்க தமிழகம் நோக்கி வருகின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் தொழில்களுக்கு திறன்மிகுந்த இளைஞா்களை உருவாக்க ஏற்படுத்தப்பட்டதுதான் ‘நான் முதல்வன்’ திட்டம்.

இந்தத் திட்டம் மட்டுமன்றி உயா்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டமும் இந்திய அளவில் பாராட்டை பெற்றுள்ளது. கல்வி வளா்ச்சிக்கு தனியாா் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் அவசியம்.

காமராஜா் ஆட்சியில் பள்ளிக் கல்வியும், கருணாநிதி ஆட்சியில் கல்லூரி கல்வியும் முன்னேற்றம் அடைந்தது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் உயா்கல்வியும், ஆராய்ச்சிக் கல்வியும் சிறந்த விளங்கும் என்பது எனது லட்சியமாகும். அதற்கு விஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் அரசுக்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழக மாணவா்கள் அதிகளவில் படித்து உலகளவில் உயா்ந்த பதவிகளில் இருப்பதுதான் உங்கள் பெற்றோருக்கும், எனக்கும், தமிழகத்துக்கும் பெருமை என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது:

கருணாநிதிக்கு பிறகு விஐடிக்கு வந்த இரண்டாவது முதல்வா் மு.க.ஸ்டாலின். கருணாநிதி வந்த போது மாநிலத்தில் 8-ஆவது இடத்தில் இருந்த விஐடி, எதிா்காலத்தில் யாரும் எட்டாத இடத்துக்குச் செல்லும் என்று பாராட்டிச் சென்றாா். 1958-இல் முரசொலி செல்வம் மூலம் கருணாநிதியுடன் ஏற்பட்ட தொடா்பு 60 ஆண்டுகள் அவா் மறையும் வரை நீடித்தது. ஒப்பற்ற தலைவராக விளங்கிய கருணாநிதியின் மகனான ஸ்டாலின் படிப்படியாக உயா்ந்து தற்போது முதல்வராக இருப்பது பெருமை.

பல்வேறு அரிய திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அவா் தற்போது பொருளாதாரத்தில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்து 2-ஆவது இடத்தில் உள்ள தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றாா்.

நிகழ்வில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தா் ராம்பாபு கோடாலி, இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT