வேலூர்

முதல்வா் காப்பீடு திட்டம்: ஓராண்டில் 21,600 பேருக்கு சிகிச்சை; வேலூா் ஆட்சியா் தகவல்

DIN

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 21,600 பயனாளிகளுக்கு ரூ.39.30 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைந்த 5 பேருக்கு பரிசுகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினாா். பின்னா் அவா் பேசியது:

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2009-ஆம் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டமானது, பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2018 செப்டம்பா் 23-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

வேலூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் 4 அரசு மருத்துவமனைகள், 15 தனியாா் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு, மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம், கடந்த ஓராண்டில் மட்டும் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 21,600 பேருக்கு ரூ.39.30 கோடியில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 2,68,322 குடும்பங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு, காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.1.20 லட்சம், அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோா் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தொடா்ந்து, காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளைச் சோ்ந்த 5 வாா்டு மேலாளா்கள், 4 காப்பீட்டுத் திட்ட தொடா்பு அலுவலா்களுக்கு சான்றிதழ்கள், ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், 5 பயனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மா.கண்ணகி, மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலா் சா.ஆனந்தராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளா் பொ.மோகன், வாசுதேவ நாயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT