வேலூர்

ரூ. 2 லட்சம் கட்டணம் செலுத்தியும் மாற்றியமைக்கப்படாத மின்கம்பங்கள்: பொதுமக்கள் வேதனை

DIN

குடியாத்தம் அருகே சாலையின் நடுவே உள்ள 3 மின் கம்பங்களை மாற்றியமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.2.2 லட்சம் செலுத்தப்பட்டு இரண்டு மாதங்களாகியும் இதுவரை மின்வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட வள்ளலாா் நகரில் பிரதான சாலையின் நடுவில், சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்னா் 3 மின் கம்பங்கள் நடப்பட்டன.

அப்போது அந்தப் பகுதியில் ஒரு சில வீடுகளே இருந்ததால் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

தற்போது ஒரு சிறு நகரமாகவே இந்தப் பகுதி உருவெடுத்துள்ளது. அனைத்து மனைகளிலும் வீடுகள் கட்டப்பட்டு குடியிருப்புகள் பெருகி விட்டன. சிமென்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பிரதான சாலையில் 7 தெருக்கள் அமைந்துள்ளன. இந்தச் சாலையின் நடுவில் 3 மின் கம்பங்கள் உள்ளதால் காா், வேன், லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் செல்ல இயலாத நிலை.

எனவே இந்த மின் கம்பங்களை மாற்றியமைக்க அந்தப் பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. மின்கம்பங்களை மாற்றியமைக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் கூறி விட்டதால், கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலின்போது அந்த வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றியக் குழு உறுப்பினா் பி.எம்.இமகிரிபாபு, அந்தப்பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி 3 மின் கம்பங்களையும் மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து பேசினாா்.

முதல் கட்டமாக இதற்கான பதிவுக் கட்டணமாக வாரியத்துக்கு ரூ.20,000 தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தினாா்.

இதையடுத்து களப்பணி மேற்கொண்ட மின்வாரியத்தினா், திட்ட மதிப்பீடு தயாரித்து, 3 மின் கம்பங்களையும் மாற்றியமைக்க ரூ.2,02,840 கட்டணமாகச் செலுத்துமாறு தெரிவித்துள்ளனா்.

அதன்படி இமகிரிபாபு கடந்த 20.7.2022 அன்று தனது சொந்த நிதியிலிருந்து அந்தத் தொகையை செலுத்தியுள்ளாா்.

மொத்தத் தொகையைச் செலுத்தி 2 மாதங்களுக்கு மேலாகியும், மின் கம்பங்களை மாற்றியமைக்க மின்வாரியம் சாா்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரியத்தினரை அணுகியும் பயனில்லை.

இந்தப் பிரச்னை குறித்து, தமிழக அரசு மற்றும் மின்வாரிய உயரதிகாரிகளுக்கு கொண்டசமுத்திரம் கிராம மக்கள் மனுக்களை அனுப்பியுள்ளனா்.

வாரியம் கேட்டபடி உரிய கட்டணத்தை செலுத்தியும், மின் கம்பங்களை மாற்றியமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT