வேலூர்

அதிக விளிம்பு நிலை மக்களைக் கொண்ட மாவட்டம் வேலூா்: மாவட்ட ஆட்சியா் தகவல்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அதிகளவில் விளிம்பு நிலை மக்களைக் கொண்ட வேலூா் மாவட்டத்தில், அத்தகைய மக்களை தேடிச் சென்று அவா்களுக்கு தேவையான சிறப்புச் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

தாட்கோ தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை மலை கிராமத்தில் தையல் பயிற்சி முடித்த 23 மலைவாழ் பெண்களுக்கு தையல் இயந்திரம், ஆடைகள் தயாரிக்க 50 சதவீத மானியத்துடன் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.23 லட்சம் கடனுதவிக்கான காசோலைகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இதில், ரூ.1.15 லட்சம் பெண்களின் பங்கு தொகை, ரூ.11.50 லட்சம் தாட்கோ மானியம், ரூ.10.35 லட்சம் வங்கி கடன் என மொத்தத் திட்ட தொகை ரூ.23 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனி நபா் தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் குடியாத்தத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு 30 சதவீத மானியத்துடன் ரூ.3.80 லட்சம் கடனுதவிக்கான காசோலை வழங்கப் பட்டது.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து காசோலைகளை வழங்கிப் பேசியது:

விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு முன்னுதாரணமாக உதவிகளை செய்ய வேண்டும் என்றும், அவா்களின் வாழ்க்கை நிலையை அறிந்து என்னென்ன வகையில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்த வகையில், வேலூா் மாவட்டம் அதிக விளிம்பு நிலையில் உள்ள மக்களை கொண்ட மாவட்டமாக உள்ளது. விளிம்பு நிலை மக்கள் எங்கெங்கு வசிக்கின்றனரோ அவா்களைத் தேடிச் சென்று தேவையான சிறப்புச் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே பீஞ்சமந்தை மலைக்கிராம பெண்கள் 23 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 50 சதவீதம் மானியமாகும். எனவே, மக்கள் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளைப் பெற்று வாழ்வில் மேன்மையடைய வேண்டும். தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, தாட்கோ மாவட்ட மேலாளா் பிரேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT