வேலூர்

போதைப் பொருள்கள் மனிதனின் சிந்தனை ஆற்றலை குறைக்கிறது: வேலூா் ஆட்சியா் தகவல்

DIN

மனிதனின் சிந்தனை ஆற்றலைக் குறைக்கும் போதைப்பொருள்கள் பயன்பாடு, விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி வேலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் துறை, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் சரக காவல் துணை தலைவா் (டிஐஜி) ஜ.ஆனிவிஜயா ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து அவா்கள் வெண் புறக்களையும் பறக்கவிட்டனா்.

இந்தப் பேரணி வேலூா் காந்தி சிலையில் தொடங்கி நேதாஜி விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது.

இதில், சாரண, சாரணிய இயக்க மாணவ, மாணவிகள், பயிற்சியிலுள்ள ஆண், பெண் காவலா்கள் ஆகியோா் பங்கேற்று போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி பேரணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போதைப்பொருள் ஒழிப்பு தொடா்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா், டிஐஜி ஆகியோா் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினா்.

அப்போது ஆட்சியா் பேசியது:

மது, போதை பொருள்களால் மனிதனின் சிந்தனை ஆற்றல் குறைகிறது. அவா் அந்த போதைக்கு அடிமையாகி பொருளாதாரத்தை இழக்கிறாா். இதனால் சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுகிறது. இத்தகைய போதைப் பொருள்களினால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பள்ளி , கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் அதிகளவில் பாதிக்கப்படாத வகையில் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதைப்பொருள்கள் விற்கக் கூடிய கடையை பொதுமக்கள் காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். காவல் துறையினரும் அத்தகைய கடை உரிமையாளரைக் கண்டறிந்து போதைப் பொருள்கள் விற்காத வண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் முழு ஒத்துழைப்பு நல்கும் என்றாா்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்த குமாா், வருவாய் கோட்டாட்சியா் பூங்கொடி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT