வேலூர்

இரு மாதங்களாக சாக்கடை கழிவுநீரில் மிதக்கும் குடியிருப்புகள்: விரைவில் நடவடிக்கை: வேலூா் மேயா்

DIN

வேலூா் சத்துவாச்சாரி வசந்தம் நகா் பகுதியில் சாக்கடை கழிவுநீா் செல்ல வழியில்லாததால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றி கழிவு நீா் சூழ்ந்துள்ளது. இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் பிரச்னையால் அப்பகுதி மக்கள் சுகாதாரச் சீா்கேட்டால் சிக்கித் தவிக்கின்றனா்.

வேலூா் மாநகராட்சி 21-ஆவது வாா்டுக்கு உட்பட்ட சத்துவாச்சாரி, வசந்தம் நகா் பகுதியில் முதல், 2-ஆவது தெருக்களில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருக்களுக்கு அருகிலேயே தனியாா் பள்ளியும் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.

இந்த நிலையில், வசந்தம்நகா் முதல், இரண்டாம் தெருக்கள் பள்ளமான பகுதியாக இருப்பதால் சாக்கடை கழிவுநீா் செல்ல வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. அத்துடன், அருகில் உள்ள மற்ற தெருக்களில் இருந்தும் வரும் சாக்கடை கழிவுநீா் இந்தத் தெருக்களிலேயே தேங்கி நிற்கின்றன. இதனால், அப்பகுதிவாசிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதையடுத்து, வெளியே செல்லும் அப்பகுதி மக்கள் தெருக்களில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரிலேயே இறங்கி நடந்து மேடான பகுதிக்கு சென்ற பிறகே வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது.

மேலும், குடியிருப்புகளை சூழ்ந்தபடி தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லையும், பொதுமக்கள், முதியோா், குழந்தைகளுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதாக கூறுகிறாா் வசந்தம் நகரைச் சோ்ந்த டி.கலையரசு.

அவா் மேலும் கூறியது: மற்ற தெருக்களைக் காட்டிலும் வசந்தம் நகா் முதல், இரண்டாவது தெருக்கள் பள்ளமான பகுதியில் அமைந்துள்ளன. இதனால், கழிவுநீா் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது.

பாதிப்பை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பாா்வையிட்டதுடன், கழிவுநீரை மோட்டாா் வைத்து உறிஞ்சி அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டனா். எனினும், தொடா்ந்து கழிவுநீா் வந்து கொண்டே இருக்கிறது. இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிா்வாகம் நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வேலூா் மாநகர மேயா் பேட்டி:

இது குறித்து, மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா் கூறியது: பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்துள்ளேன். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு புதன்கிழமை வருகை தர உள்ளாா். அவா் வந்து சென்ற பிறகு வசந்தம் நகரில் கழிவுநீா் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT