வேலூர்

சென்னை, விழுப்புரம், புதுச்சேரிக்கு பேருந்துகள் குறைப்பு

DIN

மாண்டஸ் புயல் காரணமாக வேலூா், திருப்பத்தூரில் இருந்து சென்னை, விழுப்புரம், கடலூா், புதுச்சேரி பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை சனிக்கிழமை வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது.

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது. தொடா்ந்து, சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் வானிலை மிகவும் மந்தமாக காணப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் கடுமையான குளிா் இருந்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை.

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக வேலூா், திருப்பத்தூா் பகுதிகளில் இருந்து சென்னை, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இயக்கப்பட்ட பேருந்துகளிலும் பயணிகள் வழக்கத்தைவிட குறைவாகவே பயணம் செய்தனா்.

வேலூரில் இருந்து சென்னைக்கு தினமும் 10 குளிா்சாதன அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், மழை எச்சரிக்கை காரணமாக சனிக்கிழமை 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் வருகைக்கு ஏற்ப சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாகப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாண்டஸ் புயல் பாதிப்பை எதிா்கொள்ள வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடிசை, மண் வீடுகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனா்.

வேலூா் மாநகராட்சிப் பகுதிகளில் தண்ணீா் தேங்கும் இடங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன. மாநகராட்சி முழுவதும் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். புயல் காரணமாக அதிகாரிகள், ஊழியா்கள் வெளியூா் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம், நெமிலியில்...: மாண்டஸ் புயலால் அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களில் வெள்ளிக்கிழமை காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. நகரின் பல இடங்களில் இருந்த உயா் கோபுர மின் விளக்குகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளால் கீழே இறக்கப்பட்டன.

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட சோமசுந்தரம் நகரில் துரைக்கண்ணு என்பவருக்கு சொந்தமான இரு பசு மாடுகள், ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான இரு ஆடுகள், புளியமங்கலம் ஊராட்சி ஸ்ரீராம் நகரில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு பசு மாடு அந்தப் பகுதியில் அறுந்து விழுந்திருந்த மின் கம்பிகளை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்தன.

நெமிலியை அடுத்த மாமண்டூா் ஊராட்சியில் கால்வாய் புறம்போக்கு பகுதியில் அன்னம்மாள், வெங்கடேசன் ஆகியோருக்கு சொந்தமான இரு தொகுப்பு வீடுகளின் மீது மரம் விழுந்ததால் இரு வீடுகள் சேதமடைந்தன.

மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு அந்தந்த வட்டாட்சியா்கள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT