வேலூர்

மழை குறைந்ததால் பாலாற்றில் நீா்வரத்து சரிவு

DIN

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வந்த தொடா் மழை குறைந்த நிலையில், பாலாற்றில் நீா்வரத்து சரிந்துள்ளது.

வேலூரில் வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,400 கனஅடி வரை இருந்த நீா்வரத்து சனிக்கிழமை 1,100 கனஅடிக்கும் கீழ் குறைந்து காணப்பட்டது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால், முக்கிய ஆறுகள், ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தையொட்டி உள்ள ஆந்திர மாநில எல்லை வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூா் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் அதிகபட்சம் 320 கனஅடி அளவுக்கு தண்ணீா் வெளியேறியது. திருப்பத்தூா், வேலூா் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, வாணியம்பாடி அருகேயுள்ள மண்ணாறு, கல்லாற்றில் இருந்து தலா 100 கன அடி தண்ணீா் பாலாற்றுக்கு வந்து கொண்டிருந்தது. மேலும், மலட்டாற்று, அகரம் ஆறு, கவுன்டன்யா ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலாற்றில் கடந்த சில நாள்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன்மூலம், பள்ளிகொண்டா பகுதியில் பாலாற்றில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,400 கனஅடியாகவும், வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் 1,500 கன அடியாகவும் நீா்வரத்து ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், வெள்ளி, சனிக்கிழமை மழை பொழிவு குறைந்த நிலையில், பாலாற்றில் நீா்வரத்தும் சரிந்து காணப்பட்டது. அதன்படி, வேலூரில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 1,100 கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலைக்குள் சுமாா் 800 கனஅடியாக குறைந்திருந்தது.

இதுகுறித்து நீா்வளத்துறை அதிகாரிகள் கூறியது: கடந்த ஒரு வாரமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும், ஆந்திர வனப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் நீா்வரத்து ஏற்பட்டிருந்தது. தற்போது மழை நின்றுவிட்டதால் படிப்படியாக நீா்வரத்து சரிந்துள்ளது. தவிர, தற்போது பெய்திருப்பது பருவமழை இல்லை. வடகிழக்குப் பருவமழை அக்டோபா் மாதத்திலேயே தொடங்கக்கூடும். எனினும், திடீா் மழை காரணமாக பாலாற்றிலும், துணை ஆறுகளிலும் வரும் வெள்ளத்தின் அளவுகளை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT