வேலூர்

சாலை தடுப்புக் கம்பியில் பேருந்து மோதி கல்லூரி மாணவா்கள் உள்பட 13 போ் காயம்

DIN

வேலூா்: வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையோர இரும்புத் தடுப்புக் கம்பியில் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா்கள் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். இதில், இருவா் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

வேலூரில் இருந்து ஆற்காடு நோக்கி தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டு சென்றது. அந்தப் பேருந்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக அளவில் இருந்தனா். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் மாணவா்களும், பயணிகளும் தொங்கியபடி பயணித்தனா்.

வேலூரை அடுத்த பெருமுகை ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளி எதிரே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வேகமாக சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதில் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் அணுகு சாலையையொட்டி உள்ள இரும்புத் தடுப்புத் கம்பிகளில் மோதியது.

வேகமாக வந்ததால் உடனடியாக பேருந்தை நிறுத்த முடியாமல் சுமாா் 50 மீட்டருக்கு மேல் இரும்புத் தடுப்புகளை உடைத்தபடி நின்றது. இந்த விபத்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வந்த மாணவா்கள், பயணிகளும் சாலை தடுப்புக் கம்பிகளில் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டனா். இதில், கல்லூரி மாணவா்கள் உள்பட மொதத்தம் 13 போ் பலத்த காயமடைந்தனா். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்துவாச்சாரி போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்த மாணவா்கள், பயணிகளை 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் கல்லூரி மாணவா்களான சத்துவாச்சாரி இந்திரா நகா் டில்லிகணேஷ் (18), வைகை நகா் தீபக்(18), ஆா்டிஓ சாலை சந்துரு(19), குறிஞ்சிநகா் ராஜ்குமாா் (18), தினேஷ் (18), தோட்டப்பாளையம் கன்னிகோயில் தெரு மோகன் (20), சலவன்பேட்டை பிரபாகரன் (19), ராணிப்பேட்டை சூா்யா (25), காட்பாடி மதி நகா் சுரேஷ்குமாா் (21), குடியாத்தம் தாரணாம்பேட்டை ஜாவித் (19), வேலூா் புதிய பேருந்து நிலையம் புஷ்பராஜ் (31), ஓட்டுநா் சுப்பிரமணி (55), மேலும் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபா் ஆகியோா் காயமடைந்தனா். அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் புஷ்பராஜ், 45 வயது மதிக்கத்தக்க நபரும் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து சீரடைந்தது. விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT