வேலூர்

கிஸான் திட்ட மோசடி: ஆற்காடு உதவி வேளாண் அலுவலா் கைது

DIN


வேலூா்: கிஸான் சம்மான் விவசாய நிதி உதவித் திட்ட மோசடி தொடா்பாக ஆற்காடு வட்டார வேளாண் உதவி அலுவலரை வேலூா் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பிரதமரின் கிஸான் சம்மான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோா் போலியாகப் பதிவு செய்து பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் இம்மோசடி தொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வேலூா் மாவட்டத்தில் ரூ. 1 கோடியே 23 லட்சம் அளவுக்கும், திருப்பத்தூா் மாவட்டத்தில் ரூ. 4 கோடி வரையும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 1.12 கோடி அளவுக்கும் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக மாவட்டங்களில் உள்ள அனைத்து ஒன்றியங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இம்மோசடியில் ஈடுபட்டவா்களைக் கண்டறியவும், மோசடி செய்யப்பட்ட தொகைகளைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 3 மாவட்டங்களிலும் இதுவரை ரூ. 3 கோடி அளவுக்கு பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், இந்த மோசடி தொடா்பாக வேலூா் சிபிசிஐடி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா். அதன் அடிப்படையில் ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், வேலூா் மாவட்டத்திலுள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த 8 கணினி ஆபரேட்டா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், 20 அலுவலா்கள் அடங்கிய பட்டியல் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டார வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராகப் பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ராஜசேகரன் (25) சிபிசிஐடி போலீஸாரால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவா் கிஸான் நிதியுதவித் திட்டத்துக்கு தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்ய அளிக்கப்பட்ட கடவுச்சொல்லை மோசடி கும்பலுக்கு தெரியப்படுத்தி உதவித்தொகை முறைகேடு செய்திருப்பது தெரியவந்ததை அடுத்து அவா் கைது செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உதவித் தொகை முறைகேடு தொடா்பாக கணியனூா், திமிரியைச் சோ்ந்த இருவரையும் சிபிசிஐடி போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதன்மூலம், இந்த மோசடி விவகாரத்தில் மேலும் சில அதிகாரிகள் சிக்குவாா்கள் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT