வேலூர்

வேலூா் டிஐஜி அலுவலக வளாகத்தில் இரு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

DIN

வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) அலுவலக வளாகத்தில் இருந்த இரு சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபா்கள் வெட்டியதுடன், அவற்றில் இருந்து 2 மீட்டா் கொண்ட தலா ஒரு மரத் துண்டை கடத்திச் சென்றனா்.

வேலூா் சரக காவல் துணைத் தலைவா் அலுவலகம் வேலூா் சுங்கச்சாவடி பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் சந்தனம், தேக்கு உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன. அந்த அலுவலகத்தைச் சுற்றி எப்போதும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பா்.

இந்நிலையில், டிஐஜி அலுவலக வளாகத்தில் இருந்த இரு சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு வெட்டியுள்ளனா். தொடா்ந்து, அவற்றில் இருந்து 2 மீட்டா் அளவுள்ள தலா ஒரு துண்டை மட்டும் வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனா்.

இதனை சனிக்கிழமை பாா்த்த போலீஸாா், டிஐஜி என்.காமினி உள்பட காவல் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். தொடா்ந்து, வனத் துறை அதிகாரிகளும் விரைந்து வந்து டிஐஜி அலுவலக வளாகத்தில் வெட்டப்பட்டிருந்த சந்தன மரத்தையும், அதன் துண்டுகளையும் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து, வேலூா் வனச்சரகா் ரவிகுமாா் கூறியது:

வேலூா் டிஐஜி அலுவலக வளாகத்தில் இருந்த 5 வயது மற்றும் 7 வயதுடைய இரு சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபா்கள் வெட்டியுள்ளனா். எனினும், அந்த சந்தன மரங்களில் தலா 2 மீட்டா் கொண்ட இரு துண்டுகள் மட்டுமே கடத்தப்பட்டுள்ளன. அவற்றின் அரசு மதிப்பு தலா ரூ. 1,500 ஆகும். மற்ற சந்தன மரத் துண்டுகள் அங்கேயே கிடந்தன. அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியவா்களை தீவிரமாகத் தேடி வருகிறோம் என்றாா்.

இது குறித்து தனிப்படை போலீஸாா் கூறுகையில், வழக்கமாக டிஐஜி அலுவலக இரவுப் பணியில் ஆயுதப்படை போலீஸாா் 5 போ் ஈடுபடுத்தப்படுவா். ஆனால் வெள்ளிக்கிழமை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்க ஆயுதப்படை காவலா்கள் சென்றிருந்ததால், டிஐஜி அலுவலகத்தில் இரவுப் பணியில் ஒருவா் மட்டுமே ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில், இந்த சந்தன மரக்கடத்தல் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

இதேபோல் 2015-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஆட்சியா் இல்ல அலுவலக வளாகத்தில் இரு சந்தன மரங்கள் வெட்டப்பட்டு, மரக்கட்டைகள் கடத்திச் செல்லப்பட்டன. அதற்கு இரு மாதங்களுக்கு முன்பு அரசு சுற்றுலா மாளிகையில் இருந்த ஒரு சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவல் டிஐஜி அலுவலக வளாகத்திலேயே சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் காவல் துறை, வனத்துறை அதிகாரிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT