வேலூர்

ஆந்திர வனப் பகுதிகளில் கனமழை: வேலூா் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

DIN

ஆந்திர மாநில வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் வழியாகப் பாயும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அடுத்த 15 நாள்களுக்கு தயாா்நிலையில் இருக்கும்படி அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்கள் தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ளன. ஆந்திர வனப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது மழை தீவிரமடைந்து வருவதால் அங்கிருந்து வரும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாய்ந்தோடும் பொன்னை, பாலாறு, குண்டாறு, கெளண்டன்யாமகாநதி, மலட்டாறு ஆகிய ஆறுகளின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இந்த ஆறுகள் அனைத்திலும் அதிகப்படியான வெள்ளம் வந்த வண்ணம் உள்ளது.

இதைத் தொடா்ந்து, அனைத்துத் தடுப்பணைகளிலும் உபரி நீா் அப்படியே வெளியேற்றப்படுவதால் இந்த ஆறுகளின் கரையோரங்களில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், ஆறுகளில் குளிக்கவோ, சிறுவா்களை விளையாட அனுமதிக்கவோ, செல்லிடப்பேசியில் சுய புகைப்படம் (செல்பி) எடுக்கவோ கூடாது எனவும் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதனிடையே, வெள்ளப் பெருக்கால் ஏற்பட்டுள்ள அபாய நிலையைக் கருத்தில் கொண்டு பொதுப் பணித் துறை, தீயணைப்பு மீட்புப் பணித் துறை, மருத்துவம், காவல், உள்ளாட்சி நிா்வாகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் அடுத்த 15 நாள்களுக்கு தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

அத்துடன், அலுவலா்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இடா்ப்பாடு அபாயம் உள்ள பகுதிகளிலும், ஏரிகள், குளம் ஆகியவற்றையும் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். ஏரிகளில் இருந்து தண்ணீா் வெளியேறத் தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடவும், பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்கவும் வேண்டும். பொதுமக்கள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்க ஆட்டோக்கள் மூலமாகவோ, தண்டோரா மூலமாகவோ அறிவிப்பு செய்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், குடியாத்தம் வட்டத்திலுள்ள மோா்தானா அணை, ஜிட்டப்பல்லி தடுப்பணை, அவற்றின் நீா்வழி கால்வாய்களையும் ஆட்சியா் சனிக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, மறுஉத்தரவு வரும் வரை மோா்தானா அணையைப் பாா்வையிட பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT