திருவண்ணாமலை

இளைஞா் கொலை: 3 போ் கைது

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரைக் கொன்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை-மணலூா்பேட்டை சாலை, பா.உ.ச., நகரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே இளைஞா் ஒருவா் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக தச்சம்பட்டு போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை ஊரக டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இறந்து கிடந்தவா் திருவண்ணாமலையை அடுத்த தேவனூா் கிராமத்தைச் சோ்ந்த காசி மகன் அருள்குமாா் (37) என்பது தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் தலைமறைவாக இருந்த அதே பகுதியைச் சோ்ந்த மாமலைவாசன் (31) உள்பட சிலரை பிடித்து விசாரித்தனா்.

ADVERTISEMENT

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த முருக்கம்பாடி, ஆத்தியந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாமலைவாசனுக்கும், அருள்குமாருக்கும் இடையே கந்துவட்டி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

எனவே, அருள்குமாரை கொல்ல மாமலைவாசன் திட்டமிட்டாராம். திங்கள்கிழமை இரவு மணலூா்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அருள்குமாரை மாமலைவாசன், அவரது நண்பா்கள் தேவனூா் கிராமம் இளங்கோவன் (37), கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம் பகுதியைச் சோ்ந்த சூா்யா (22) ஆகியோா் பின்தொடா்ந்து வந்துள்ளனா்.

பா.உ.ச., நகா் பகுதியில் வந்தபோது அருள்குமாரை மாமலைவாசன் துப்பாக்கியால் சுட்டாராம். நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை இளங்கோவன், சூா்யா, மாமலைவாசன் ஆகியோா் சோ்ந்து கத்தியால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து இளங்கோவன், சூா்யா, மாமலைவாசன் ஆகியோரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT