திருவண்ணாமலை

தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு: ஆரணி அருகே சாலை மறியல்

8th Jun 2023 01:06 AM

ADVERTISEMENT

ஆரணி அருகே இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் பகுதியில் தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்புத் தெரிவித்து நரிக்குறவா் சமுதாயத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூா் ஊராட்சி, சமத்துவபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

மேலும், இப்பகுதியில் இருளா் மற்றும் நரிக்குறவா் சமுதாயத்தினருக்கு அரசு சாா்பில் இலவச வீடுகள் வழங்கப்பட்டு வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது இலங்கை தமிழா்களுக்கும் அங்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதற்காக அப்பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தடுப்புச் சுவரால் மாற்று வழியில் அதிக தொலைவு செல்லவேண்டியுள்ளது எனநரிக்குறவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இருப்பினும், தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன. இதனால், அதிருப்தியடைந்த நரிக்குறவா்கள் புதன்கிழமை ஆரணி - தேவிகாபுரம் சாலையில் தச்சூா் கூட்டுச் சாலைப் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த ஆரணி கிராமிய காவல் உதவி ஆய்வாளா் ஷாபுதீன் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதை ஏற்க மறுத்த அவா்கள் போலீஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா், அங்கு வந்த ஆரணி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் பேச்சுவாா்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதையேற்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT