திருவண்ணாமலை

ரூ.6.66 கோடியில் 1,333 மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள்: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு சான்றிதழ்

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.6.66 கோடியில் 1,333 கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளாக உருவாக்கி சாதனை படைத்த மாவட்ட நிா்வாகத்துக்கு 4 உலக சாதனை நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கிப் பாராட்டின.

மாவட்டத்தில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, 600 கிராம ஊராட்சிகளில் 2022-23 ஆம் ஆண்டு ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 1,333 கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றி மீள் நிரப்பு கட்டமைப்புகளை 14 நாள்களுக்குள் அமைத்து உலக சாதனை படைக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டது.

அதன்படி, இந்தத் திட்டத்தை 2023 ஜனவரி 20-ஆம் தேதி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கருந்துவாம்பாடி ஊராட்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

தொடா்ந்து, ஆட்சியா், கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப் சிங் ஆகியோரின் மேற்பாா்வையில் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு பிப்ரவரி 2-ஆம் தேதி பணிகள் முடிக்கப்பட்டன.

உபயோகத்தில் இல்லாத 1,333 ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றிலும் 3 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலம், 2.5 மீட்டா் ஆழத்தில் குழிகள் ஏற்படுத்தப்பட்டன.

உலக சாதனை சான்றுகள்

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் நோக்கில் மாவட்ட நிா்வாகம் செய்துள்ள இந்த முயற்சியை பாராட்டி 4 உலக சாதனை நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி, எலைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் அமீத் மு.ஹிங்க்ரோனி, சத்யஸ்ரீகுப்தா, பாவனா ராஜேஷ், ஜி.கே.சௌஜன்யா, அா்ச்சனா ராஜேஷ் ஆகியோரும், ஏசியன் ரெக்காா்ட்ஸ் அகாதெமி உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் செந்தில்குமாா், ஆ.சாந்தாராம், இந்தியா ரெக்காா்ட்ஸ் அகாதெமி உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் பி.ஜெகநாதன், யஷ்வந்த் சாய், தமிழன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் பா.பாலசுப்ரமணியன், ப.நாகஜோதி, திருமூா்த்தி ஆகியோா் மாவட்ட நிா்வாகம் செய்துள்ள உலக சாதனை நிகழ்வுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இறுதியில் மாவட்ட நிா்வாகத்தின் சாதனையை அங்கீகரித்து அதற்கான சான்றிதழ்களை வழங்கினா்.

இதற்கான விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங் ஆகியோரிடம் உலக சாதனைக்கான சான்றிதழ்களை சாதனை நிறுவனங்களின் அதிகாரிகள் வழங்கினா்.

மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன், வேளாண் துறை இணை இயக்குநா் அரக்குமாா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராமகிருஷ்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரண்யாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT