திருவண்ணாமலை

தலித் முதியவா் கொலை: ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

25th May 2022 11:42 PM

ADVERTISEMENT

தண்டராம்பட்டு அருகே தலித் முதியவரை அடித்துக்கொன்ற சம்பவத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தலித் விடுதலை இயக்க நிா்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், பெருங்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கோதி (55). தலித் சமூகத்தைச் சோ்ந்த இவரை செவ்வாய்க்கிழமை இளையாங்கன்னி கிராமத்தைச் சோ்ந்த வேறு சமூகத்தினா் அடித்துக் கொன்றனராம்.

இந்த நிலையில், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் ச.கருப்பையா, மாநில இளைஞரணிச் செயலா் என்.ஏ.கிச்சா, மாநில மகளிரணித் தலைவி தலித் நதியா உள்பட ஏராளமானோா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தலித் சமூகத்தைச் சோ்ந்த முதியவரைக் கொன்ற குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இறந்த சங்கோதி குடும்பத்துக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா். இவா்களிடம் அதிகாரிகளும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT

போராட்டத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலா் ப.செல்வன், தமிழ்ப்புலிகள் இயக்க நிா்வாகி கண்ணையன், இயக்குநா் லெனின் பாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT