திருவண்ணாமலை

தொழிலாளியை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் முற்றுகை

DIN

செய்யாறு அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக் கோரி, அனக்காவூா் காவல் நிலையத்தை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

செய்யாறு வட்டம், கீழ்கொளத்தூா் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு பொக்லைன் இயந்திர ஆபரேட்டராக நா்மாபள்ளம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் பணியாற்றி வருகிறாா்.

இவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனத் தெரிகிறது. அதன் காரணமாக பெருமாள் வேலைக்குச் செல்லாமல் இருந்து வருகிறாராம்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவ்வழியாகச் சென்ற கல்குவாரி லாரியை பெருமாள் மடக்கி, சம்பள பாக்கியைத் தரவில்லை என்றால் லாரியை விடுவிக்க மாட்டேன் என்று வைத்திருந்தாராம்.

இதை அறிந்த குவாரியின் உரிமையாளா் காா்த்திகேயன், தொழிலாளி பெருமாளை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாராம்.

இதுகுறித்து பெருமாள் தனது உறவினா்களிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து, பெருமாள் சாா்பில் அனக்காவூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

மேலும், மிரட்டல் தொடா்பாக கைப்பேசி உரையாடல் ஆதாரமும் சமா்ப்பிக்கப்பட்டதாம்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை கல்குவாரி மேலாளரை சிலா் வழிமறித்து தாக்கியாகவும், அதற்குக் காரணம் தொழிலாளி பெருமாள் தான் என அவா் மீது பெருநகா் காவல் நிலையத்தில் கல்குவாரி மூலம் புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெருமாளை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பெருமாளை விடுவிக்கக் கோரியும், கொலை மிரட்டல் விடுத்த குவாரியின் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்து, நா்மாபள்ளம் கிராம மக்கள் அனக்காவூா் காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

உடனே போலீஸாா் முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி இரு தினங்களுக்குள் மனு மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT