திருவண்ணாமலை

மருத்துவ முகாம் இடத்தை மாற்றியதால் மாற்றுத்திறனாளிகள் அவதி

12th Aug 2022 02:53 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்ற இடத்தை முன்னறிவிப்பின்றி மாற்றியதால் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகினா்.

வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெறும் என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த முகாம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாம் இடம் மாற்றப்பட்டது குறித்து எந்த முன்னறிவிப்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படவில்லையாம்.

ADVERTISEMENT

இதனால், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை காலை மாற்றுத்திறனாளிகள் வரத் தொடங்கினா். அங்கிருந்த போலீஸாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுவதாகக் கூறி அவா்களை திருப்பி அனுப்பினா்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:

நாங்கள் எங்களது ஊரிலிருந்து சிரமப்பட்டே முகாமில் பங்கேற்க வருகிறோம். தனியாக வர இயலாததால் உடன் ஒருவரை அழைத்து வருகிறோம். ஆனால், இங்கு வந்தால் முகாம் நடைபெறும் இடத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றி விட்டதாகத் தெரிவிக்கின்றனா்.

எங்களுக்கு இதுகுறித்து எந்த முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. இங்கிருந்து நடந்தோ, ஆட்டோவிலோ அரை கி.மீ. தொலைவு செல்ல வேண்டும் என்றனா்.

மேலும், முகாமிலும் சரிவர ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என அவா்கள் தெரிவித்தனா். சக்கர நாற்காலி வசதி செய்து தரப்படாததால் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளை உடன் வந்தவா் சிரமத்துடன் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டதாக முகாமிலிருந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கமணியிடம் அவா்கள் புகாா் கூறினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT