திருவள்ளூர்

தேர்வழி தான்தோன்றீஸ்வரர் கோயில் விளக்கு பூஜைக்கு அனுமதி மறுப்பு: மக்கள் அதிர்ச்சி

5th Oct 2022 11:26 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி: தேர்வழியில் தான்தோன்றீஸ்வரர் கோயில் விளக்கு பூஜை நடத்த அதிகாரிகள் அனுமதி தராதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சியில் ஸ்ரீ தாட்சாயிணி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயில் பரம்பரை அறங்காவலராக குமரவேல் நிர்வாகம் செய்து வருகிறார்.

இவர் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் இணைந்து, பதிவு செய்த அறக்கட்டளை மூலம் தேர்வழி கிராமத்தில் ஆண்டுதோறும் விளக்கு பூஜை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று விஜயதசமியை ஒட்டி இந்த கோயிலில் விளக்கு பூஜை நடத்த வழக்கம்போல் திட்டமிட்டுள்ளார். இதற்காக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான ஞானமூர்த்தி, தட்சணாமூர்த்தி ஆகியோர் அறங்காவலர் குமரவேல் விளக்கு பூஜைக்கு போட்ட அதே நோட்டிஸை போட்டு இவர்களை அறங்காவலராக கூறிக் கொண்டு அதே நாளில் விளக்கு பூஜை நடத்த வட்டாட்சியர் கண்ணணிடம் விண்ணப்பித்திருந்தனர்.

ADVERTISEMENT

இதனையொட்டி இருதரப்பையும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வட்டாட்சியர் அழைத்த நிலையில் குமரவேல் தரப்பின் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளாமல் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி வட்டாட்சியர் கண்ணன் விளக்கு பூஜை நடத்த தடை விதித்தார்.

இதனால் தேர்வழி கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்தனர்.

பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளை மூலம் தாங்கள் விளக்கு  பூஜை நடத்துவதை, எவ்வித ஆவணங்கள் இன்றி போலியாக தங்களை அறங்காவலர் என கூறிக்கொண்டு  விளக்கு பூஜை நோட்டிஸை மட்டும் அச்சிட்டு, விளக்கு பூஜைக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் இருப்பவர்கள் கூறுவதை வைத்து நிறுத்துவது முறையல்ல என்று கூறி கண்டனம் தெரிவித்தனர்.

இதனால் விளக்கு பூஜைக்கு பதிவுசெய்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கவலை அடைந்துள்ள நிலையில், தேர்வழி ஊராட்சியில் விளக்குபூஜை ரத்து செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT