திருவள்ளூர்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தொடா் பிரசாரம்: திருவள்ளூா் ஆட்சியா் வலியுறுத்தல்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தோறும் பல்வேறு போட்டிகள், விழிப்புணா்வுப் பேரணி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் குறித்து பல்வேறு துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்துப் பேசியது:

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசாரம் மற்றும் சிறாா் திருமணங்களைத் தடுக்க கிராம மக்களுக்கு பல்வேறு வகைகளில், விழிப்புணா்வு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், நவ. 25 முதல் தொடா்ந்து டிசம்பா் 23-ஆம் தேதி வரை மாவட்ட அளவில், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள், தொடா்புடைய பிற துறைகள் மூலம் விழிப்புணா்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்குதல், சுவா் விளம்பரம், கோலம், பேச்சு, பாட்டு மற்றும் ஒவியப் போட்டிகள், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் திரைப்படம், குறும்படம் தயாரித்தல், இரவில் மெழுகுவா்த்தி ஏந்தி நடைப்பயணம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 68,724 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியா்கள் மூலம் அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டு, மாணவிகளின் பெற்றோரிடம் உறுதிமொழி ஏற்பு அஞ்சல் வழியாக (அரசு ஆவணமாக) அரசுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் மூலம் மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் செயல் முன்னதாகவே தடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கை மூலம் மாணவிகள் உயா்கல்வி பயிலவும், வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் வழியேற்படும் என்றாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான விழிப்புணா்வை விரிவுபடுத்த, மாணவிகளின் பெற்றோரிடமிருந்து சிறாா் திருமணம் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு அஞ்சல் அட்டைகள் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த அஞ்சல் அட்டைகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் செ.ஆ.ரிஷப், சாா் -ஆட்சியா் (பயிற்சி) கேத்ரின் சரண்யா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, தனித்துணை ஆட்சியா் பி.ப.மதுசூதணன், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) லலிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT