திருவள்ளூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

DIN

திருவள்ளூர்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை திருவள்ளூர் ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தொடக்கி வைத்தார். 

பெண் குழந்தைகளுக்காக ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூறும் வகையில், முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு  நாளாக அனுசரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.   

அதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவப் படத்துக்கு ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஆட்சியர் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அனைவரும் கையெழுத்திட்டனர். 

இதேபோல், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில் சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர்களின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் அருகே வெண்மனம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார். ஆசிரியைகள் உமா, ஆனந்தி, அம்பிகா மற்றும் ஹேமா உள்ளிட்ட மாணவிகள் பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றனர். அதைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக 1098 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்வது மற்றும் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய கவிதை, பாடல், கதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.

திருத்தணியில்...

திருத்தணி அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை டி. தெமினாகிரோனேப் பங்கேற்று, மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்றனர். அப்போது மாணவிகள் சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இன்றி, அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். என் கவனத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுக்க முழு பயற்சியில் ஈடுபடுவேன்.

குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன். குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன் போன்ற உறுதி மொழிகள் மாணவிகள் எடுத்தனர். 

உதவி தலைமை ஆசிரியர்கள் விக்ரமாதித்தன், சேஷாசலம், உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வர் ராவ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமையில் அரசு அதிகாரிகள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர். 

இதையடுத்து சமூக பாதுகாப்புத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில், நலிவுற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் திட்டமான நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52 பெண் குழந்தைகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ. 8 ஆயிரத்துக்கான காசோலைகளை மாணவிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பெண் குழந்தைகளுக்கான 24 மணி நேர இலவச மற்றும் அவசர உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஆட்சியர் வெளியிட மாணவிகள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அமைக்கப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியைப் பார்வையிட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் சிறு முழக்கம் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT