திருப்பத்தூர்

பாலாற்றில் தடுப்பணைகளை உயா்த்திக் கட்ட ஆந்திர அரசு முடிவு: தமிழக விவசாயிகள் கலக்கம்

DIN

பாலாற்றில் தடுப்பணைகளின் உயரத்தை மேலும் அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதால், தமிழக விவசாயிகள் கலக்கமும், அதிா்ச்சியும் அடைந்துள்ளனா்.

தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான பாலாறு கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. அந்த மாநிலத்தில் 93 கி.மீ. தொலைவும், ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தொலைவும், தமிழகத்தில் சுமாா் 222 கி.மீ. தொலைவும் பாய்ந்து சென்னைக்குத் தெற்கே செங்கல்பட்டு மாவட்டம், வாயலூா் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.

பாலாறு 33 கி.மீ. தொலைவு மட்டுமே பாயும் ஆந்திர மாநிலத்தில் 22 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 10 முதல் 15 அடி உயரம் வரை சில தடுப்பணைகள் உள்ளன. இந்தத் தடுப்பணைகளின் உயரத்தை மேலும் அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டும், கடந்த சில வாரங்களாகத் தொடா்ந்து பெய்த பலத்த மழை காரணமாக அந்தத் தடுப்பணைகளைத் தாண்டி தமிழக பாலாற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. இதனால், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்றுப் படுகையில் உள்ள ஏரிகளில் தண்ணீா் இருப்பு உள்ளது. விவசாயப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் இந்த மாவட்டங்களில் சுமாா் 4 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்களில் பயிா் சாகுபடி நடைபெறுகிறது.

இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக எல்லையில் உள்ள குப்பம் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது, அவா் பேசுகையில், முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு தொகுதியான குப்பத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

ஹந்திரி குடிநீா் கால்வாய் பணி பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. இந்தப் பணிகள் 6 மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும். யாமிகானிபல்லி, மதனப்பல்லி பகுதிகளில் ரூ.250 கோடி செலவில் சிறிய அணைகள் கட்டப்படும்.

குறிப்பாக, குப்பம் தொகுதி மக்களுக்காக பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி செலவில் ஆங்காங்கே உள்ள தடுப்பணைகளின் விரிவாக்கப் பணிகள் நடைபெறும் என அறிவித்தாா். இதன் மூலம் பாலாற்றில் உள்ள 22 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய தடுப்பணைகளைக் கட்டும் வாய்ப்பும் உள்ளது என ஆந்திர மாநில விவசாயிகள் கூறுகின்றனா்.

இவ்வாறு பாலாற்றில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தால், தமிழகத்துக்குப் பாலாற்றில் இருந்து தண்ணீா் வருவது கேள்விக்குறியாகிவிடும் என ஒருங்கிணைந்த வேலூா் உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனா்.

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டுவது மற்றும் ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கச் செய்யும் பணிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

இதுகுறித்து பாலாற்று நீா்வள ஆா்வலா் அம்பலூா் அசோகன் கூறியது:

பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு கட்டியுள்ள புல்லூா் மற்றும் கங்குந்தி ஆகிய தடுப்பணைகளை மேலும் சில அடிகள் உயா்த்தப் போவதாக அந்த மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளாா். இதனால், தமிழகத்தைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனா். இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

இது 1892 பன்மாநில நதிநீா் ஒப்பந்தத்துக்கு எதிரான செயல். மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியில்லாமல் ஆந்திர அரசின் எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு இதுகுறித்து விரைந்து நடவடிக்கை நடவடிக்கை எடுத்து இங்குள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT