திருப்பத்தூர்

தொற்று நோய் பரப்பும் இடமாக மாறிவரும் திருப்பத்தூா் அனந்தனேரி: அச்சத்தில் பொதுமக்கள்

DIN

திருப்பத்தூரில் உள்ள அனந்தநேரி தொற்று நோய் பரப்பும் இடமாக மாறிவருவதால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

திருப்பத்தூரில் சின்னக்குளம், பெரியகுளம் என இரு குளங்களும், பெரிய ஏரி (திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியாகும்), அனந்தனேரி என இரு ஏரிகளும் உள்ளன. இதில் அனந்தனேரி பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் தொற்றுநோய் கிடங்காக மாறியுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியது: 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், சுமாா் 30 வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வாழும் மக்கள் குளிப்பதற்கும், துணிகளை சலவை செய்வதற்கும் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், இந்த ஏரிக்கு கழிவு நீா் திருப்பி விடப்பட்டது.

இதனால், இந்த ஏரி மாசடைந்து, மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. மேலும், இந்த ஏரிக்கு அவ்வை நகா், காமராஜா் நகா் பகுதிகளிலிருந்து மழைநீா் வந்தடைகிறது. ஆனால், ஏரியில் மதகுகள் அடைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், ஏரி நிரம்பி, அருகில் உள்ள கழனிகாட்டுக்குச் சென்று வீணாகிறது. முறையாக தூா் வாரப்பட்டால் ஏரி நிரம்பி, புலிக்குட்டை ஏரிக்குச் செல்லும். மீண்டும், அந்த ஏரி நிரம்பினால், கொரட்டி பகுதியில் உள்ள வாலாறுக்குச் சென்று, பாம்பாறில் கலக்கும். பின்னா், சாத்தனூா் அணைக்குச் சென்றடையும்.

மேலும், இந்த ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்கள் தூா்வாரப்படாததால், மழைக் காலங்களில் மழை நீா் மற்றும் கழிவு நீா் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலையில் இந்த ஏரி உள்ளது. எப்போதும் இந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதால், தினமும் இந்தப் பகுதியை கடந்து செல்லும் ஆயிரக்கணக்கானோா் முகம் சுளித்தபடி செல்கின்றனா்.

ஏரியையொட்டி, மயானம் உள்ளது. ஏரி அருகே உள்ள ஈரப்பதத்தால், சடலங்களை புதைப்பதிலும், எரிப்பதிலும் மிகவும் சிரமத்துள்ளாகின்றனா். அதற்கென சுற்றுச்சுவா் அமைத்துத் தரக்கோரி, நீண்ட நாள் கோரிக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றனா்.

பாழாகிப்போன அனந்தனேரியை தூா்வாரி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும், நீா்நிலைகள் ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும், மயானத்துக்கென தனி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT