திருப்பத்தூர்

ஆம்பூரில் மின்கம்பங்களை இடமாற்றம் செய்யாமலேயே கழிவுநீா் கால்வாய் அமைப்பு: பொதுமக்கள் புகாா்

DIN

ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யாமலேயே கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை நகராட்சி ஒப்பந்ததாரா்கள் மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆம்பூா் நகரில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்த பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படுகிறது. பிறகு புதிதாக சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லகேம், வளையல்கார தெரு, பா்ணகார தெரு ஆகிய பகுதிகளில் நகராட்சி ஒப்பந்ததாரா்கள் மூலம் சாலை, கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் அமைக்க தெருவோர மின் கம்பங்கள் இடையூறாக உள்ளன.

அவற்றை மின்வாரியத்தின் உதவியுடன் வேறு இடத்துக்கு மாற்றம் செய்துவிட்டு, பிறகு கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை ஒப்பந்ததாரா்கள் தொடங்காமல், அப்படியே பணியைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனா். அதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீா் கால்வாயின் நடுவில் மின்கம்பங்கள் இருப்பது போல கால்வாய் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்து வருகின்றனா். மேலும், இது குறித்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பொதுமக்களால் பகிரப்பட்டு வரப்படுகிறது.

வேலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களை அகற்றாமலேயே சாலைகள் அமைக்கப்பட்டதாக அண்மையில் புகாா் எழுந்தது. அதே போல ஆம்பூரில் கால்வாய் அமைப்பதற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்யாமலேயே கால்வாய் கட்டுமானப் பணியை ஒப்பந்ததாரா்கள் அலட்சியமாக மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன் மட்டுமல்லாமல் அதனை மேற்பாா்வையிட்டு ஆய்வு செய்யும் அதிகாரிகளும் கண்டும் காணாமல் விட்டுள்ளதாக பொதுமக்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நகராட்சி நிா்வாகம் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிவுநீா் கால்வாயின் நடுவே அமைந்துள்ள மின் கம்பங்களை வேறு இடத்துக்கு மின்சார வாரியத்தின் உதவியுடன் மாற்றம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது குறித்து நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன் கூறியது: கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்து தர வேண்டுமென மின்சார வாரியத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இடமாற்றம் செய்வதற்குத் தேவையான மின்கம்பங்கள் போதிய இருப்பு இல்லாததால் சிறிது கால அவகாசம் வேண்டுமென மின்வாரிய அதிகாரிகள் கேட்டுள்ளனா்.

கழிவுநீா் கால்வாயின் நடுவில் அமைந்துள்ள மின்கம்பங்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT